உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்

உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்

இந்தியாவின் எல்லையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் திபெத்தில் கட்டப்படும் இந்த அணையால் பிரம்மபுத்திரா நதி பாய்ந்தோடும் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ஆசியாவின் பெரிய வற்றாத ஜீவநதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா. இந்த நதி திபெத்திலுள்ள கயிலாய மலையில் ‘ஸாங்-போ’ என்ற பெயரில் புறப்பட்டு திபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான ‘யர்லுங் இட்சாங்போ’ வழியாக அருணாசலபிரதேசத்தில் நுழைந்து, அசாம் மாநிலத்தில் ஓடுகிறது.

பின்னர் தெற்கு நோக்கி பாய்ந்து வங்கதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது. மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த நதியின் சராசரியான நீர் வெளியேற்றம் விநாடிக்கு 19,800 கன மீட்டர்.

திபெத் பகுதியில் பெரும்பாலும் பாயும் இந்த பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் பகுதியில் நீர்மின்சாரத் திட்டத்திற்காக உலகிலேயே மிகப்பெரிய அணை கட்ட சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று சீன அரசு நடத்தும் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இமயமலைப் பகுதியில் உள்ள ஒரு பெரிய பள்ளத்தாக்கில் இந்த அணை கட்டப்பட உள்ளது.

இதற்காக ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சீனாவின் த்ரீ கோர்ஜஸ் அணை உட்பட ஹாங்காங்கை தளமாகக் கொண்ட தென் சீனா அணை உட்பட உலகில் உள்ள அனைத்து அணைகளையும் விட மிகப்பெரியதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டில் திபெத்தில் உள்ள மிகப்பெரிய ஜாம் நீர்மின் நிலையத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது.

தற்போது 2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டு திட்டத்தில் பிரம்மபுத்திரா அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.

சீனா அணை கட்டிவிட்டால் பிரம்மபுத்திரா நதி மீது சீனாவுக்கு அதிகாரம் வந்துவிடும். மேலும் எல்லைப் பகுதிகளில் இருந்து பெரிய அளவில் தண்ணீரை திறந்து இந்தியாவுக்குள் விடவும் வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த அணை கட்டுவதால் இந்தியா அதிக கவலை கொண்டுள்ளது.

அதே சமயம் அருணாச்சல பிரதேசத்தில் பிரம்மபுத்திராவின் குறுக்கே இந்தியாவும் அணை கட்டுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )