அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம்

அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம்

பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

“கருசரு” வேலைத்திட்டத்திற்கு இணையாக செயற்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்துக்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று  (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “மக்களுக்கு பண்டிகைகளைக் கொண்டாட மன நிம்மதி இல்லை என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வெசாக், பொசன் பண்டிகைகளை மாத்திரமன்றி நத்தார் பண்டிகையையும் கொண்டாடுவதற்குத் தேவையான சூழலை உருவாக்கியுள்ளது. அதனால் குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் கடந்த வருடத்துடன் தற்போதைய நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள் என்றே சொல்வேன். மக்கள் இழந்திருந்த மன நிம்மதி மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை சாடும் எவரிடத்திலும் சரியான பொருளாதாரத் திட்டமொன்று இல்லை. அப்படியொரு வேலைத்திட்டம் இருந்தால் முன்வையுங்கள், நாங்கள் சொன்னதை செய்துக்காட்டிக் கொண்டிருக்கிறோம். அஸ்வசும, உறுமய உள்ளிட்ட திட்டங்கள் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருந்தாலும் இதற்கு முன்னர் அவர் ஜனாதிபதியாக இருந்ததில்லை. அவர் முதல் முறையாக பதவியேற்றதில் இருந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். 25% ஆகக் காணப்பட்ட வங்கி வட்டி இன்று 12% – 8% ஆகக் குறைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )