போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அவ்வாறான போலி வைத்தியர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகளினூடாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் ,”நாட்டில் பல்வேறு வைத்திய முறைகள் செயற்பாட்டில் இருக்கின்றன. அந்த முறைகளுடன் தொடர்புடைய வைத்தியர்கள் வைத்திய சபையில் பதிவு செய்யவேண்டும். அவ்வாறான பதிவுகளில் ஒருசில பதிவுகளில் பிரச்சினை இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட வைத்திய முறைகளுக்கு அப்பாலான வைத்திய முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

போலி வைத்தியர்களும் நாட்டில் இருக்கிறார்கள். அவ்வாறான வைத்தியர்களை தேடி சுகாதார வைத்திய அதிகாரிகளினூடாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எனவே, அனுமதி பெறாத போலி வைத்தியர்கள் இருப்பார்களாக இருந்தால் அவ்வாறானவர்கள் தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறோம்.

அதேபோன்று, மருந்து விநியோக செயற்பாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் தொடர்புபட்டுள்ளன. எனவே, மருந்து பிரச்சினைக்கு இந்த நிறுவனங்களுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே பிரதான தீர்வாக இருக்கும். அதனையும் தற்போது நாங்கள் செய்து வருகிறோம்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் சில சிக்கல்களும் இருக்கின்றன. இதனால் கோப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. மார்ச் மாதமாகும்போது மருந்து விநியோகத்திலிருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )