மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-23)
திருப்பாவை
பாடல்:
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக்
கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
மழைக் காலத்தில் காட்டில் ஒரு குகையில் காலம் மறந்து உறங்கும் சிங்கம், தானாக உணர்ந்து எழுந்து, அனல் பறக்கும் கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்க்க, சோம்பல் முறித்து, நெஞ்சை நிமிர்த்திப் புறப்படும். அதேபோல் காயாம்பூவைப் போன்ற கருநீல நிற முடைய கண்ணனே! உனது இடத்தில் இருந்து, எம்மிடம் வந்து அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் வந்த காரணத்தைக் கேட்டு அருள்புரிவாய்.
திருவெம்பாவை
பாடல்:
கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஒருப்படு கின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
யாவரும் அறிவரி யாய்; எமக் கெளியாய்
எம்பெரு மான்; பள்ளி எழுந்தரு ளாயே!
விளக்கம்:
குயில்கள் கூவுகின்றன; கோழிகள் கூவுகின்றன; நீர்ப்பறவைகள் சத்தமிடுகின்றன. பொழுது விடிந்து விட்டது என்பதை அறிவிக்கும் விதமாக சங்குகளும் ஒலித்தன. கதிரவன் வரவால் விண்மீன்களும் மறைந்தன. சூரியன் ஒளி வீசுகின்றான். திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! எவரும் அறிந்து கொள்ள முடியாதவனும், எமக்கு எளியவனுமாகிய பெருமானே! தேவர்களுக்கு நற்கதியை அளிக்கும் உன் வீரக் கழல் அணிந்த பாதங்களை எமக்குக் காட்டும்படி துயில் நீங்கி எழுந்தருள்வாய்!