தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்

தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்

“அரசாங்கத்தின் குறுகிய நோக்கங்களுக்கு நான் இலக்காக மாட்டேன். சூட்சுமமாக எனக்கு எதிராக சேறு பூசுவதை நிறுத்திவிட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.

மேலும், தேர்தலுக்கு முன்னர் தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது என்பதை அரசாங்கம் மக்களுக்கு தெளிவாக அறிவித்தால் அதுவே முதலாவது ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ வேலைத்திட்டமாக இருக்கும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் மக்கள் கடுமையாக விசனமடைந்துள்ளனர்” என்று சர்வசன அதிகாரம் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

பராளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை, நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அறிவித்தல், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் அறிவித்தல், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை ஆகியவை மீதான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர், ‘‘இந்த பாராளுமன்றம் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலுடனான சபை என்பதை ஆளுங்கட்சி மற்றும் எதிர்த்தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும். நானும் புதிய பாராளுமன்ற உறுப்பினர் என்பதுடன் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், 49 நாட்கள் என்னால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புகளுக்கமைய இந்த பாராளுமன்றத்தினூடாக நேர்மறையான வாய்ப்பை ஏற்படுத்திகொடுத்துள்ளதா என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது. அரசாங்கத் தரப்பினர் தாம் தற்போது அரசாங்கத்தில் இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டே செயலாற்றுகிறார்கள். எதிர்க்கட்சிக்குரிய பண்புகளையே அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பாராளுமன்றத்தில் பேசப்படும் விடயங்கள் நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோன்று நானும் அரசாங்கத்தின் மீது பாரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளேன். பாரிய எதிர்பார்ப்புகளுடனேயே மக்கள் இருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி கூறுவது போன்று இந்த நாட்டின் மீதான 75 வருட சாபத்தை சரிசெய்ய வேண்டுமெனில் அதனை சரி செய்யும் வகையில் கருத்து முன்வைக்காமல், மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய விடயங்களைப் பற்றி பேச வேண்டும். அதன் காரணமாகவே நாட்டு மக்கள் பாவமானவர்கள் என்று கூறுகிறேன்.

ஆனால், குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவே மக்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையிலான வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன என்பதை ஆளுங்கட்சியினரும் அறிவார்கள். நாங்களும் அறிவோம்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஆளுந்தரப்பினர் நன்கு அறிந்து வைத்திருந்தால், அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்பதை ஆளுந்தரப்பினரும் அறிந்தே வைத்திருக்க வேண்டும். வருமானமின்றி செலவு செய்ய முடியாது.

தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மக்களுக்கு உண்மையை வெளிப்படையாக கூறிவிட வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஒரு அடி கூட முன்னேற்ற பாதையில் பயணிக்க முடியாது.

உந்துதல் மிக்க தேசமொன்று எமக்கு அவசியமாகும். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய எதனையாவது நடைமுறைப்படுத்தி காட்ட வேண்டும்.

தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது என்பதை மக்களுக்கு தெளிவாக அறிவித்தால் அதுவே முதலாவது கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டமாக இருக்கும். மக்கள் விசனமடைந்துள்ளனர்.

இன்னும் அரசாங்கத்துக்கு ஐந்து வருடங்கள் இருப்பதால் மக்களுக்கு கூறிய விடயங்களை நிறைவேற்றிக் காட்டுங்கள். என்டிஜன் தொடர்பிலும் பேச முடியும். ‘தெரண’ தொலைக்காட்சி தொடர்பிலும் பேச முடியும். ‘அருண’ பத்திரிகை தொடர்பிலும் பேச முடியும். பேச முடியாமல் இல்லை.

ஆனால், அதற்கு அப்பால் நாட்டின் மாற்றத்துக்கான திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். ஆளுங்கட்சியினரை போன்று பாராளுமன்ற உணவகத்துக்கு சென்று உணவு உண்பதற்காக நான் பாராளுமன்றத்துக்கு வரவில்லை. மக்களுக்காக என்னால் முடிந்த ஏதாவது நன்மை செய்வதற்காகவே பாராளுமன்றம் வந்துள்ளேன்.

அரசாங்கத்துக்கு சரியான வேலைத்திட்டம் இல்லை. கிளீன் ஸ்ரீ லங்கா என்று கூற முச்சக்கரவண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக பொருட்களை அகற்றுவது மாத்திரமே இந்த அரசாங்கத்தால் செய்ய முடியும். மக்களின் கனவுகளை அடியோடு ஒழிப்பது மாத்திரமே உங்களால் முடியும்.

மக்களின் கனவுகளுக்கு உயிர்கொடுக்க இந்த அரசாங்கத்தால் ஒருபோதும் முடியாது. நாளாந்த வாழ்க்கை தொடர்பான புரிந்துணர்வோ வரவுசெலவு தொடர்பிலான புரிந்துணர்வோ இந்த அரசாங்கத்துக்கு இல்லை.

முன்னுதாரணமாக மாற்றத்துக்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லை. என்டிஜன் தடுப்பூசி தொடர்பில் தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமெனில் சுகாதார அமைச்சரிடம் விளக்கம் கேளுங்கள். இந்த கேள்விக்கு சுகாதார அமைச்சரே விளக்கமளித்திருக்கிறார்.

1,146.22 ரூபாவுக்கு மாத்திரமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உங்களின் அமைச்சரே இந்த சபையில் கூறியிருக்கிறார்கள். ஹன்சாட் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஹன்சாட் அறிக்கையை நன்கு வாசித்துவிட்டு என்னிடம் கேள்வி கேளுங்கள்.

பத்திரிகைகளை அடிப்படையாகக் கொண்டு சூட்சுமமாக சேறு பூசும் திட்டத்தை அரசாங்கத் தரப்பு ஆரம்பித்துள்ளது. அருண பத்திரிகை என்பது ‘தெரண’ தொலைக்காட்சியின் இணை ஊடகம். ஆனால், அரசாங்கத்துக்கு தெரண தொலைக்காட்சி சிறந்து விளங்குகிறது.

அருண பத்திரிகை இந்த அரசாங்கத்துக்கு தவறான பத்திரிகையாகிவிட்டது. தற்போது ‘த மோர்னிங்’ பத்திரிகையும் சிறப்பாகிவிட்டது. பால் சமத்துவம் தொடர்பில் பேசும் ‘பல்ஸ்’ ஊடகமும் எனக்கு சொந்தமானதே. அந்த ஊடகமும் தற்போது இவர்களுக்கு நன்றாகிவிட்டது. தெரண நட்பாக இருக்கும்போது அருண எவ்வாறு எதிராக முடியும்.

நானும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன். இருந்தாலும் தேசிய மக்கள் சக்திக்கான முக்கியத்துவத்தை வழங்கியுள்ளோம். அந்த கெளரவத்தையாவது கொடுக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களுக்கு வந்த மக்கள் தொகையை ட்ரோன் கெமராக்களினூடாக பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை எனது ஊடகமே மக்களுக்கு வெளிப்படுத்தியது.

உங்களின் குறுகிய நோக்கங்களுக்கு இலக்காக மாட்டேன். இருந்தபோதும் சேறு பூசல்களை நிறுத்திவிட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். சேறு பூசல்களுக்காகவும் இவர்களின் தேவைகளுக்காகவும் என்னால் கட்டியெழுப்பப்பட்ட எனது சாம்ராச்சியத்தை கைவிட மாட்டேன்’’ என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )