உள்ளாடைகளில் ஓட்டை இருப்பது தான் தேசிய பிரச்சினையா ?
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதால் இந்நாட்டு பொருளாதாரம் மீண்டெழுந்துவிடுமா.” என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் , “சட்டத்தின் ஆட்சி நடைபெறாத நாடாக பங்களாதேஷ் மாறியுள்ளது. இலங்கையிலும் அவ்வாறானதொரு நிலைமையை தோற்றுவிப்பதற்கு முற்படுகின்றனர்.
அதனால்தான் மேற்குலகத்துக்கு தேவையான யோசனைகள் மூன்று தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்த மூவரில் யார் வெற்றிபெற்றாலும் தமது நோக்கம் நிறைவேறும் என மேற்குலகம் நம்புகின்றது.
உள்ளாடைகளில் ஓட்டை இருப்பது தான் தேசிய பிரச்சினையா? இது பற்றிதான் தற்போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கதைக்கின்றனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்குரிய வழிமுறைகள் பற்றி கதைக்கப்படாதது ஏன்? சர்வஜன கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மட்டுமே இதற்குரிய தீர்வு உள்ளது.
உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவுக்கு உயிர் கொடுக்க வேண்டுமெனில், படையினரை பழிகடாவாக்க வேண்டுமெனில் மாற்று தரப்பினருக்கு வாக்களியுங்கள். படையினர் உயிர் தியாகம் செய்து காத்த நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில் எமது அணி வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.
வடக்குக்கு சென்று 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் எனக் கூறுபவர்களுக்கு இந்நாட்டை கட்டியெழுப்ப முடியுமா? 13 ஐ அமுல்படுத்துவதால் பொருளாதாரம் மீண்டுவிடுமா? பொலிஸ் அதிகாரம் வழங்குவதால் பொருளாதாரம் எழுந்துவிடுமா ? விழுந்த பொருளாதாரத்துக்கு உயிர் வருமா? எனவே, காட்டிக்கொடுப்புகளை நிறுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.