துருக்கி ரிசோர்ட் தீ ; 76 பேர் பலி
துருக்கியின் தலைநகர் அங்காராவின் வடமேற்கு போலு (Bolu) மாகாணத்தில் உள்ள பிரபலமான பனிச்சறுக்கல் ரிசோர்ட்டில் (ski resort) ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இன்று புதன்கிழமை தினத்தை தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளார்.
வடமேற்கு போலு மாகாணத்தில் உள்ள துருக்கியின் கர்தல்காயா பனிச்சறுக்கு ரிசோர்ட்டில் (Kartalkaya ski resort) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
தீ ஏற்பட்ட வேளையில், 238 பேர் ஹோட்டல் அறைகளில் பதிவு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயத்தை தொடர்ந்து இடம்பெற்ற அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், நாளை நாடு முழுவதும் ஒரு நாள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு, பலியானவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.
இது போன்ற பேரழிவை ஏற்படுத்தியவர்கள், அலட்சியம் மற்றும் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 51 பேர் காயமடைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்திருந்தார். காயமடைந்தவர்களில் 17 பேர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த ஏனையோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பரபரப்பான விடுமுறை காலத்தில் 238 விருந்தினர்கள் தங்கியிருந்த 12 மாடிகளைக் கொண்ட மரத்தினாலான ஹோட்டலில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3:27 மணிக்கு (இலங்கை நேரப்படி மு.ப. 5.57) இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நான்காவது மாடியில் உள்ள உணவகப் பகுதியில் தீ ஏற்பட்டு அது மேல்நோக்கிப் பரவியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக, போலு மாகாண ஆளுநர் அப்துல்அஜிஸ் அய்டின் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கர்தல்காயா ஹோட்டலானது, இஸ்தான்பூலுக்கு கிழக்கே 300 கி.மீ. தொலைவில் உள்ள கொரோக்லு (Koroglu) மலைகளில் உள்ள ஒரு பிரபலமான பனிச்சறுக்கல் ரிசோர்ட் ஆகும்.
குறிப்பு: ski resort என அழைக்கப்படும் ஹோட்டல்கள் அல்லது தங்குமிடங்கள், பனிச்சறுக்கல் உள்ளிட்ட பனியுடன் தொடர்பான விளையாட்டுகளை மேற்கொள்வதனை நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்டவையாகும்.