1,289 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு ; இருவர் கைது
கற்பிட்டி – உச்சமுனை மற்றும் கீரிமுந்தல் ஆகிய கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது 1,289 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேல் கடற்படை கட்டளையின் விஜய நிறுவனத்தின் உச்சமுனை கடற்படையினர் கற்பிட்டி மற்றும் கீரிமுந்தல் ஆகிய கடற் பிரதேசத்தில் கடந்த 20 ஆம் திகதி இரவு விஷேட ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது, உச்சமுனை கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகினை பரிசோதனை செய்தனர்.
இதன்போது குறித்த படகில் 21 உரமூடைகளில் 654 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த பீடி இலைகள் அடங்கிய உரமூடைகளை கடற்பிரதேசத்தில் இருந்து வேறு இடமொன்று எடுத்துச் செல்வதற்காக தயார் நிலையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு உழவு இயந்திரத்தினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த பீடி இலைகள் உழவு இயந்திரம் மற்றும் இயந்திர படகு என்பனவற்றை தமது பொறுப்பில் எடுத்த கடறபடையினர், அந்த படகில் பயணித்த ஒருவரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, விஜய நிறுவன கடற்படையினர் கற்பிட்டி – கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது, 18 உரமூடைகளில் அடைக்ப்பட்ட நிலையில் 635 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, குறித்த பீடி இலைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வல்லம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 33, 43 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் கற்பிட்டி மற்றும் மண்டலக்குடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி இயந்திர படகு, வல்லம், இரண்டு உழவு இயந்திரம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.