தற்போதைய ஆளுந்தரப்பினர் தேர்தல்களின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எப்போது ?
கிராமத்து விகாரை என்பது அனைவரும் ஒன்று கூடும் இடமாகும். இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்று கூடும் இடம். கிராமங்களில் விகாரைகள் கலாச்சாரத்திலும், நாட்டின் அபிவிருத்தியிலும் பெரிதும் பங்கு வகிக்கின்றன. ஆன்மீக நடவடிக்கைகள் போலவே அறம் பேணும் உயர் சமுதாய உருவாக்கத்திற்கும் இது பங்களிக்கிறது. வீழ்ச்சி கண்ட நாட்டை மீளக் கட்டியெழுப்பும் செயன்முறையில் விகாரை முக்கிய பங்காற்றுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஒரு நாடாக, நாம் பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும்போது, இந்த வீழ்ச்சியிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். நாட்டு மக்கள் ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், நட்பை மனதில் கொண்டு ஒன்றுபட வேண்டும். நாட்டினது முன்னோக்கிய அபிவிருத்தியில் கிராமங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இந்நாட்டு மக்கள் வாழ்வதற்கு சவாலாக உள்ள வேளையில், 220 இலட்சம் மக்களின் நலனுக்காக உழைப்பது அனைவரினதும் கடமையாகும் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
காலி, எல்பிட்டிய எல்ல இராஜாபிஷேகராம வரலாற்று சிறப்பு மிக்க புராதன விகாரையின் ஸ்ரீ மஹா போதியின் மரக்கன்று நடும் நிகழ்வு நேற்று (30) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் வேளையில், மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்கள் மீதுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டினால் மக்கள் நிர்க்கதிகளைச் சந்தித்து வருகின்றனர். புத்தாண்டு காலத்தில் அனுஷ்டானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அரிசி தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகர்வோருக்கு மலிவு விலையில் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் அரிசியின்றி நிர்க்கதியாக இருக்கும் தருணத்தில், தமது விளைபொருட்களுக்கு நிலையான விலை கிடைக்காததால் விவசாயிகள் மேலுமொருவகையில் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளனர். அரசாங்கம் இதுவரை எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. வாய் பேச்சோடு நிற்கின்றனர். நடவடிக்கைகள் ஏதும் இல்லை. ஒரு பக்கம் விவசாயிகளை பாதுகாத்து கொண்டு மறுபக்கம் நுகர்வோரையும் பாதுகாக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை வெகுவாக எழுந்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு முன்வைத்த தேர்தல் கொள்கை பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தருணம் தாராளமாக கிடைத்துள்ளது. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.