எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வு

எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வு

குழந்தைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் நிபுணர் கபில ஜயரத்தன தெரிவித்தார்.

இலங்கை மருத்துவ சங்கத்தில் 30ம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது வைத்தியர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

மேலும் வருடாந்தம் 3 இலட்சத்து 13 ஆயிரம் தாய்மார்கள் கர்ப்பம் தரிப்பதுடன், 2 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. எனினும் அவ்வாறு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நல்ல தேகாரோக்கியத்துடன் பிறப்பது பிறப்பது இல்லை.

ஆண்டு தோரும் 5 வயதுக்கும் குறைந்த 3,300 குழந்தைகள் உயிரிழக்கின்றனர். கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது பிறப்பு வீதம் குறைவடைந்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 

நாட்டில் கர்ப்பம் தரிக்கும் தாய்மார்களில் சுமார் 26 ஆயிரம் பேருக்கு கர்ப்ப காலத்தின் ஆரம்ப பகுதியில் கரு கலைவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. 

அதாவது கர்ப்பம் தரித்ததிலிருந்து 3 தொடக்கம் 4 மாதங்களுக்குள் பல்வேறு காரணங்களால் தாய்மார்களுக்கு கரு கலைவதாக தெரியவந்துள்ளது.

பொருளாதார சுமை, கருத்தரித்தல் தொடர்பில் போதியளவான தெளிவின்மை, வாழ்க்கை சூழல் போன்றன இதற்கு காரணமாக உள்ளன. 

மேலும் இந்நாட்டின் சுகாதார சேவையின் தரம் வீழ்ச்சி கண்டிருப்பதும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது. இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. 

அதாவது ஆண்களின் வயதெல்லை 73 ஆகவும் பெண்களின் வயதெல்லை 80 ஆகவும் உயர்வடைந்துள்ளது. நோய் நிலைமைக்கு ஆளாகியதன் பின்னர் சிகிச்சைகளை பெறுவதை விட நோய்களில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

இலங்கையர் என்ற ரீதியில் நாம் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். நாட்டில் உள்ள 30 சதவீதமான சிறுவர்கள் அதிக உடல் பருமனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், குறிப்பிட்ட ஒரு பகுதியினர் போஷாக்கு இன்மையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

கடந்த வருடம் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் பலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். மித மிஞ்சிய சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணையதள பாவனையே இதற்கு காரணமாக உள்ளது. 

உலகில் பல நாடுகள் சிறுவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமூக வலைத்தள பாவனைக்கு தடை விதித்துள்ளன.

ஆகையால் இவ்வாறான தடை சட்டங்களை இந்நாட்டிலும் கொண்டு வருவதற்காக வைத்திய துறையினர் முயற்சித்து வருகின்றனர். 

மேலும் ஊனக் குறைபாட்டுடன் கூடிய கருக்கலைப்புக்கு இந்தியா போன்ற நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. எனினும் இலங்கையில் அச்சட்டத்தை கொண்டு வருவதற்காக சுமார் 20 வருடங்களாக போராடி வருகின்ற போதிலும், இதுவரை சாத்தியப்படவில்லை என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )