
இலங்கை – அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் இணை தலைவர்கள் தெரிவு
இலங்கை – அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் இணைத் தலைவர்களாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் அண்மையில் செய்யப்பட்டனர்.
நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டதுடன், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை – அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.
இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன குறிப்பிடுகையில், விசேடமாக இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின் 78 ஆவது ஆண்டைக் குறிப்பதாகவும், மீள ஸ்தாபிக்கப்பட்ட நட்புறவுச்சங்கம் இலங்கை மற்றும் அவுத்திரேலியாவுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கான ஊக்கியாகச் செயற்படும் எனச் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் பரந்துபட்டுக் காணப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார். அத்துடன், 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது அவுஸ்திரரேலியா அரசாங்கம் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவிற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்கு கௌரவ சபாநாயகருக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிதாக தெரிவு செய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அத்துடன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டிய அவர் இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையையும் வெளியிட்டார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தனது உரையில், இணைத் தலைவர்களாகத் தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் நம்பிக்கையை வெளியிட்டார். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய அவர் அதற்காக உயர்ஸ்தானிகரின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள சதாபிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியதுடன், இந்த முக்கியமான மற்றும் வரலாற்று ரீதியான நடவடிக்கை சட்டவாக்கம், பொருளாதாரம் மற்றும் வணிகத் துறைகள் போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுக்கு வசதியளிக்கும் எனத் தெரிவித்தார்.