E-Passport தொடர்பில் வௌியான தகவல்

E-Passport தொடர்பில் வௌியான தகவல்

மின்னணு கடவுச்சீட்டு (E-Passport) வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

அதன்படி, மின்னணு கடவுச்சீட்டு வழங்கும் பணியை சுமார் 8 மாதங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது, ​​கடவுச்சீட்டு விநியோகம் வழக்கமான நடைமுறையின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பாக 1 மில்லியன் புதிய கடவுச்சீட்டுகளை நாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், முன்மொழியப்பட்ட 24 மணி நேர கடவுச்சீட்டு வழங்கும் முறைமை தொடர்பாக 186 குடிவரவு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொருத்தமான பரீட்சையை நடத்துவதற்கான திகதியை வழங்குமாறு பரீட்சைகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த திகதி கிடைத்த பிறகு அதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )