
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு நகர மண்டபத்தில் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு முதல் பிள்ளைகளின் கற்றல் முறைகளை புதுப்பித்து ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் கற்கும் பாடசாலை முறைமையை உருவாக்க முயற்சித்து வருகிறோம்.
இந்த நாட்டை மாற்ற வேண்டுமாயின் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என தற்போதைய அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றாக இணைந்தால், அந்த மாற்றங்களை விரைவில் அடைய முடியும்.
நீங்கள் வழங்கிய மக்கள் ஆணையின் பேரிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம், உங்களுடனேயே எங்களது உடன்படிக்கை உள்ளது. அனைவருக்கும் சமமான, அனைவரையும் அங்கீகரிக்கும், அனைவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய நாட்டை நாம் ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்புவோம். நாம் ஒற்றுமையாக இருக்கும் போது நாம் வலுவாக இருக்கிறோம், எவராலும் எங்களைப் பிரிக்க முடியாது. நீங்கள் இந்த நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அந்த மாற்றத்தை வேறு திசையில் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம். இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்க மாட்டோம். சட்டத்தை தாம் விரும்பியவாறு கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்க மாட்டோம்.
இதுவரை இந்நாட்டின் அபிவிருத்தி எல்லாப் பிரதேசங்களுக்கும் ஒரே மாதிரியாக இடம்பெறவில்லை. முழு நாட்டையும் மையமாகக் கொண்ட ஒரு அபிவிருத்தி முறைமையை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்.
அஸ்வெசும நிவாரண உதவி பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்குப் போன்றே 300க்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட பாடசாலைகளின் பிள்ளைகளுக்கும் பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு ரூபா 6000/= வவுச்சரை வழங்கியுள்ளோம்.
2026 இல் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். பாடசாலை கல்வியை முடித்து சமூகத்திற்குச் செல்லும் பிள்ளைக்கு எதிர்கால பாதையை தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்வது எளிதானதல்ல என்பது எங்களுக்குத் தெரியும். நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையும் எளிதானது அல்ல, ஆனால் அதை எப்படியாவது செய்தாக வேண்டும். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் பாதுகாப்போம்” .
அனைவருக்கும் வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் வழங்குவதற்காக நாட்டை கட்டியெழுப்பும் பணியில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வேண்டுகோள் விடுத்தார்.