
வரவு செலவு திட்டம் தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பி யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
என்றாலும் வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் இருப்பதையிட்டு கவலையடைகிறேன் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்திகளுக்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், யாழ் நூலகத்தின் அபிவிருத்திக்காக ரூ.100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்றும் தெரிவித்தார்.
அந்த வகையில் யாழ்ப்பாண நூலகத்துக்கு ரூ. 100 மில்லியன் அதேபோன்று முல்லைத்தீவு வட்டுவாக்கல் பாலத்தை புனரமைக்க ரூ. 1000 மில்லியன் ரூபா மற்றும் மாகாண வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு ரூ. 500 மில்லியன் என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை தொடர்பில் அன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர், “இம்முறை வரவு செலவு திட்டத்தில் வைத்தியர்களின் சம்பளம் தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் மாத்திரம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
பட்டப்பின் படிப்பு பயிலுனர்களுக்காவது அரசாங்கம் ஏதாவது செய்திருக்க வேண்டும். அதேபோன்று வடக்கு, கிழக்கு மீனவர் பிரச்சினை தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மீனவர்கள் இந்திய மீனவர்களின் அடாவடித்தனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதற்கும் எந்த தீர்வும் முன் வைக்கப்படவில்லை.
ஜனாதிபதி யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு வருகை தந்து நாம் அங்கு முன்வைத்த பல விடயங்களை ஏற்றுக்கொண்டிருந்தார். அதன்படி எமது கோரிக்கைக்கமைய யாழ். மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.