தாமரை பறிக்க சென்ற சிறுவன் உயிரிழப்பு
அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோரா அத்துப்பிட்டிய ஏரியில் தாமரை பூ பறிக்க சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .
அத்திமலை மகா வித்தியாலயத்தின் 04 வகுப்பில் கல்வி கற்கும் கொவிப்பொல வீதியை சேர்ந்த மதிஷ தேனுவன் (வயது 9) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை (11) பாடசாலை முடிந்து , தனது நண்பர்கள் மூவருடன் தாமரை பறிப்பதற்காக குறித்த ஏரிக்கு சென்றுள்ளார்.அப்போது வறட்சி காலத்தில் தண்ணீர் எடுப்பதற்காக ஏரியின் நடுவே வெட்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார் .
சிறுவனுடன் வந்த நண்பர்கள் இச் சம்பவம் தொடர்பில் எவருக்கும் தெரிவிக்காத நிலையில் , மாலை 5.45 மணியளவாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால் சிறுவனின் தந்தை சிறுவனை தேடியுள்ளார் .
அப்போது குழந்தை ஏரியை நோக்கி சென்றதை கண்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்ததையடுத்து அங்கு சென்று பார்த்த போது , சிறுவன் ஏரியின் நடுவில் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார் .
அவரைக் உடனடியாக அத்திமலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அத்திமலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்