அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு ஜூலையில் வீட்டு உரிமைப் பத்திரங்கள்
அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், 8000 பேருக்கு உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
நகர அபிவிருத்தி அதிகார சபைக் குட்பட்ட 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இந்த உறுதிப்பத்திரங்கள் ஜூலை மாதம் வழங்கப்படுமென, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தவிர தேசிய வீடமைப்புஅபிவிருத்தி அதிகாரசபை 1,070 உறுதிப் பத்திரங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 50,000 கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, முதற்கட்டமாக மிஹிந்து சென்புர, சிறிசர உயன, மெத்சர உயன, லக்முத்து செவன, சிறிமுத்து உயன ஆகிய திட்டங்களை மையப்படுத்தி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட 22 குடியிருப்பு வீடுகளில் 14,559 வீடுகள் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக லக்ஸந்த செவன, ரந்திய உயன, லக்முத்து உயன, முவதொர உயன, சியசத செவன, புரதொர செவன,ஜயமக செவன, மிஹிஜய செவன, ஹெலமுத்து செவன, சியபத செவன, லக்சேத செவன, லக்கிரு செவன ஆகிய வீட்டுத் திட்டங்களுக்கு முன் உரிமைப் பத்திரங்கள் வழங்க இந்தஆண்டு இறுதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இவ்வருட இறுதிக்குள் கொழும்பிலுள்ள சகல அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கும் வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.