காசாவில் கடும் தாக்குதல்களுக்கு இடையேபுதிய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஆரம்பம் !

காசாவில் கடும் தாக்குதல்களுக்கு இடையேபுதிய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஆரம்பம் !

காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் பேச்சு
வார்த்தைக்காக இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் தலைவர் டேவிட்பார்னி கட்டார் பயணித்திருப்பதோடு ஹமாஸ் தரப்பினரும் மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் 273 ஆவது நாளாக நேற்றும் இடம்பெற்றதோடு நாளையுடன் 9ஆவது மாதத்தை எட்டு காசா
போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 38,000ஐ தாண்டியுள்ளது.

கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றுக்கு ஹமாஸ் அமைப்பு பதில் அளித்திருக்கும் நிலையிலேயே இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனும் இதனை வரவேற்றுள்ளார்.

இந்நிலையில் மொசாட் தலைவர் பார்னி இஸ்ரேலிய பேச்சுவார்த்தை குழு நேற்று (05) டோஹா பயணித்ததாக இஸ்ரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் கட்டார் வெளியுறவு அமைச்சர் முஹமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசிம் அல் தானியுடன் போர் நிறுத்த முன்மொழிவு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் இஸ்ரேல் திரும்பவிருப்பதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் வழங்கி இருக்கும் பதில் சாதகமாக இருப்பதாக இஸ்ரேலிய தரப்புகள் குறிப்பிட்டபோதும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யா கு தடங்கலாக இருக்கக்கூடும் என்ற கவலையும் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பேச்சுவார்த்தைக் குழு ஒன்றை அனுப்ப நெதன்யா கு தீர்மானித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நெதன்யாகு மற்றும் பைடன் தொலைபேசியில் பேசி இருப்பதோடு பணயக்கைதிகள் மற்றும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்த முன்மொழிவுக்கான ஹமாஸின் பதில் குறித்த விபரம் வெளியாகாத போதும், அந்த அமைப்பு போர் நிறுத்தத் திட்டத்திற்கு அப்பால் முழுமையான போர்
நிறுத்தம் ஒன்றை கோரவில்லை என்று பலஸ்தீன அதிகாரி ஒருவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தனது நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு இணங்கி இருப்பதாக அமெரிக்க மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ‘முக்கியமான முட்டுக்கட்டையில் நாம் திருப்பம் ஒன்றை பெற்றிருக்கிறோம்’ என்று அந்த அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதனால் உடன்பாடு ஒன்றை நெருங்கிவிட்டதாக குறிப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இஸ்ரேலுடனான உடன்படிக்கை ஒன்றின் ஓர் அங்கமாக நிரந்தர போர் நிறுத்தத்திற்கான தமது நிபந்தனையில் எந்தமாற்றமும் இல்லை என்று ஹமாஸ் அதிகாரியான முஹமது நஸ்ஸால் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய நிதியில் இயங்கும் அல் அரபியா தொலைக்காட்சிக்கு
அவர் அளித்த பேட்டியில், தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்படும் இடையூறை தவிர்க்கும் பொருட்டு ஹமாஸ் அளித்திருக்கும் பதில் தொடர்பான விபரத்தை வெளியிட முடியாது என்று கூறினார்.

எனினும் ஹமாஸின் பதிலில் முந்தைய திட்டங்களில் இருந்து கணிசமான மாற்றங்கள் இல்லை என்றும் குழுவின் பொதுவான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

முன்னர் இடம்பெற்ற போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் அமைப்பு நிரந்தரமாக போரை முடிவுக்குக் கொண்டுவருவது, காசாவில் இருந்து இஸ்ரேலியத் துருப்புகள் முழுமையாக வாபஸ் பெறுவது மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்புவது அதே போன்று நிவாரண மற்றும் மீள்கட்டமைப்புகளை அதிகரிப்பது பற்றிய நிபந்தனைகளை விதித்து வந்தது.

மறுபுறம் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கே விருப்பத்தை வெளியிட்டு வந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழிக்கும் வரை போர்
தொடரும் என்றும் வலியுறுத்தி வந்தது.

இதேவேளை புதிய போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை குறித்து லெபனானின் ஹிஸ்புல்லா தலைவர் செய்யிது ஹசன் நஸ்ரல்லா மற்றும் முன்னணி ஹமாஸ் அதிகாரியான
கலீல் அல் ஹய்யா நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். காசா போரை ஒட்டி இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையிலும் பதற்றம் நீடிப்பதோடு ஹிஸ்புல்லா
மற்றும் இஸ்ரேல் இடையே தினசரி மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் அது முழு அளவில்போராக வெடிக்கும் அச்சம் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்பு இடம் பெற்று வருகின்றன.

காசா நகரின் தராஜ் பகுதியில் பர்தாவின் குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றின்
மீது நேற்று இடம்பெற்ற வான் தாக்குதலை அடுத்து அங்கிருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டதாக அவசர மற்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று காசா நகரின் கிழக்கு பக்கமாக ஷஜைய பகுதியில் கடும் பீராங்கி தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதோடு பலஸ்தீன போராளிகளுடனான துப்பாக்கிச் சண்டையும் இடம்பெற்று வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் வடக்கு காசாவின் ஜபலியா நகரில் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்தி இருக்கும் தாக்கு தலில் அங்கு தங்கி இருந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஐவர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

காசா நகரில் மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இரு பாடசாலைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசிய நிலையில் பலரும் கொல்லப்பட்டி ருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு காசாவில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் இஸ்ரேலின் படை நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதோடு இஸ்ரேலியப் படை இன்னும்
முழுமையாக நுழையாத காசாவின் கடைசி நகரான ரபாவை கைப்பற்றும் முயற்சியிலேயே அது ஈடுபட்டு வருகிறது.

அதேபோன்று தெற்கு நகரானகான் யூனிஸின் கிழக்குப் பக்கத்தில்
இருந்து மக்களை வெளியேற இஸ்ரேலிய படை உத்தரவிட்டிருக்கும்
நிலையில் மக்கள் அடைகலம் தேடிவருகின்றனர்.

தற்காலிக முகாம்கள் நிரம்பி வருவதால் மக்கள் வீதிகளில் உறங்குவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய சுற்றிவளைப்பில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா போரை ஒட்டி மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்திருப்பதோடு இஸ்ரேலிய சுற்றிவளைப்புகளில் இந்த வாரத்தில் குறைந்தது 12 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார வட்டாரம் தெரிவித்துள்ளது.

நேற்று இஸ்ரேலியப் படை கட்டடம் ஒன்றை சுற்றிவளைத்ததை அடுத்து மோதல் வெடித்ததாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெனின் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றை இராணுவ வாகனங்கள் சுற்றிவளைத்ததாகவும் அங்கு இருப்பவர்களை சரணடையும்படி ஒலிபெருக்கியில் கூறியதாகவும் வபா செய்திநிறுவனம் குறிப்பிட்டது.

தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் கொண்டு அந்த வீடு
தாக்கப்பட்டதாக வபா குறிப்பிட்டது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய இராணுவ சுற்றிவளைப்புகள் மற்றும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதல்களில் குறைந்தது 565 பலஸ்தீனர்கள்
கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )