காசாவில் ஐ.நா. நிலைகள் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரிப்பு !

காசாவில் ஐ.நா. நிலைகள் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரிப்பு !

இஸ்ரேலியப் படை காசாவில் குடியிருப்புப்பகுதிகள் மற்றும் ஐ.நா முகாம்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதோடு தெற்கு முனையான ரபா நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னேற்றம் கண்டு வருகின்றன.

இஸ்ரேலினால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதி அதேபோன்று ஐக்கிய
நாடுகளால் நடத்தப்படும் மற்றொரு பாடசாலை மீது இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 42 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய நுஸைரத் அகதி முகாமில் உள்ள ஐ.நாவின் அல் ராசி பாடசாலை மீதே கடந்த
செவ்வாய்க்கிழமை (16) இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இங்கு ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று தெற்கில் அல் மவாசி பகுதியில் உள்ள சந்தை ஒன்றுடன் இணைக்கப்பட்ட பிரதான வீதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது.

அல் ராசி பாடசாலையில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு அல் மவாசியில்
மேலும் 17 பேர் பலியானதாக காசா அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் 70க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதில் அல் ராசி மீதான தாக்குதல் கடந்த 10 நாட்களில் ஐ.நா. மற்றும் அதன் நிறுவனங்களுடன் தொடர்புபட்ட பாடசாலைகள் மீது இஸ்ரேல் நடத்தும் ஆறாவது குண்டு மழையாக இது இருந்தது.

இந்தத் தாக்குதல்களில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒன்பது மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் மோதல்களில் காசாவில் உள்ள சுமார் 70 வீதமான ஐ.நாவால் நடத்தப்படும் பாடசாலைகள் தாக்கப்பட்டுள்ளன என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நாம் அப்பாவிகளாக இருக்கும்போது அவர்கள் ஏன் எம் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்?’

என்று நுஸைரத்தில் உள்ள ஐ.நா பாடசாலையில் தமது குடும்பத்துடன் அடைக்கலம் பெற்றிருக்கும் உம் முஹமது அல் ஹசனத் என்ற பெண் கேள்வி எழுப்பினார்.

‘நாங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்வதில்லை, ஆனால் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான இடத்தைத் தேடி வருகிறோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

நுஸைரத் அகதி முகாமில் உள்ள குடியிருப்பு இல்லம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேலிய இராணுவம் மற்றும் போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயிரக்கணக்காக பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் அதிகமான மக்கள் நிரம்பி வழியும் இடங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய தினங்களில் அதிகரித்துள்ளன.

மத்திய காசாவில் அஸ்ஸாவிய பகுதியில் வீடொன்றை இஸ்ரேலியப் படை நேற்று அதிகாலை தாக்கிய நிலையில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அங்கு இடம்பெற்ற இரு வெவ்வேறு தாக்குதல்களில் மேலும் மூவர் பலியானதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய காசாவின் அல் புரைஜ் மற்றும் அல் மகாசி முகாம்கள் மீதும் இஸ்ரேலிய டாங்கிகள் செல் குண்டுகளை வீசியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் பள்ளிவாசல் ஒன்று தகர்க்கப்பட்டதாக அவர்கள் கூறியதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அதேநேரம் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரின் வடக்கில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட இஸ்ரேலிய டாங்கிகள் தொடர்ந்து அங்கிருந்து பின்வாங்கியுள்ளது.

இஸ்ரேலியப் படை ஏனையபகுதிகளில் ஆழ ஊடுருவுவதற்கு முன்னர் இந்தத் தந்திரத்தை பயன்படுத்தியுள்ளது.

இந்த நகரின் பெரும்பகுதிகளில் இஸ்ரேலிய டாங்கிகள் செயற்பட்டு வருகின்றபோதும் அது வடக்கு பக்கமாக இன்னும் ஆழமாக ஊடுருவவில்லை.

ராபாவில் நேற்று இஸ்ரேலியப் படை இருவரை கொன்றதாக மருத்துவர்கள் குறிப்பிட்டிருக்கும் அதேநேரம் இஸ்ரேலியப் படை அங்குள்ள
வீடுகளை குண்டு வைத்து தகர்த்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துருப்புகள் ‘ரபா பகுதியில் துல்லியமான, உளவுத் தகவல் அடிப்படையிலான படை நட
வடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக’ இஸ்ரேல் இராணுவம் குறிப்பட்டுள்ளது. பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருந்த ரபாவில் இஸ்ரேலியப் படை கடந்த மே ஆரம்பத்தில் படை நடவடிக்கையை ஆரம்பித்தது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதல்களில் 81 பேர்
கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 38,794 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 89,364 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா போர் நிறுத்தத்திற்கான திட்டத்தை கடந்த மே 31 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வெளியிட்டது தொடக்கம் அந்த நாடு போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் தீவிரம் காட்டிவருகிறது.

எனினும் எகிப்து மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்தில் இடம்பெறும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஒருமுறை ஸ்தம்பித்துள்ளது.

துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹகன் பிதானுடன் தொலைபேசியில் பேசிய ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே, இந்த இழுபறி நிலைக்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டினார்.

‘மத்தியஸ்தர்களால் எமக்கு வழங்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு நாம் சாதகமாக பதிலளித்தபோதும் ஆக்கிரமிப்பாளர்கள் முடிவொன்றை எட்டுவதை தவிர்த்து வருவதோடு இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு விருப்பம் காட்டவில்லை’ என்று ஹனியே குறிப்பிட்டுள்ளார்.

அல் மவாசியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90க்கும் அதிகமான பலஸ்தீனர்கள்
கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் அமைப்பு தற்போது இடம்பெற்று வரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

எனினும் இஸ்ரேலின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டால் பேச்சுவார்த்தைக்கு திரும்பத் தயாராக இருப்பதாகவும் அது கூறியது.

காசா போர் காரணமாக இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தெற்கு லெபனானில் கடந்த செவ்வாயன்று இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மூன்று சிறிய நாட்டு சிறுவர்கள் உட்பட ஐவர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

உம் தூட் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் எதிரிகள் நடத்திய தாக்குதலில் மூன்று சிரிய நாட்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர் என்று லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

எதிரியின் ஆளில்லா விமானம் தெற்கு லெபனானின் கிபார் தப்னிட் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டதாகவும் லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )