அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது
- நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அரசியல் உருவாக்கப்பட வேண்டும்.
- இந்தப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பொருளாதாரம், அரசாங்கம் இல்லாத நாட்டையே நான் பொறுப்பேற்றேன்.
- எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றியுள்ளேன்.
- நான் எப்போதும் எனக்காக அன்றி நாட்டுக்காகவே செயற்பட்டேன்.
- இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்தப் பயணத்தை தொடர்வேன் – “ஒன்றாக வெல்வோம் – நாம் கம்பஹா ” பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் முன்மொழிவை, கம்பஹா மாவட்ட மக்கள் ஏகமனதாக வழிமொழிந்தனர்.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் உட்பட 250 முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிட வேண்டும் என்ற முன்மொழிவை கம்பஹா மாவட்ட மக்கள் ஏகமனதாக உறுதிப்படுத்தினர்.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியலை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரை இப்பயணத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.
“ஒன்றாக வெல்வோம் – நாம் கம்பஹா ” என்ற தொனிப்பொருளில் இன்று (21) கடவத்தை பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கிச் செல்லும் வழிகள் குறித்து மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில், கம்பஹா மாவட்டத்தின் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்த மக்கள், ஜனாதிபதியை அமோகமாக வரவேற்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற முன்மொழிவை கம்பஹா மாவட்ட மக்கள் சார்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்தார்.
அப்போது, மேடையில் இருந்த பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் உட்பட 250 முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்களும், கூட்டத்தில் பங்கேற்ற 15,000இற்கும் மேற்பட்டோர் கைகளை உயர்த்தி ஏகமனதாக அந்த மொன்மொழிவு நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி பொருளாதாரம் மற்றும் அரசாங்கம் இல்லாத நாட்டைத்தான் பொறுப்பேற்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் எப்போதும் தனக்காக அன்றி, நாட்டுக்காகவே செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“மக்கள் எனக்கு வழங்கிய அடிப்படையான பொறுப்பை நான் நிறைவேற்றியுள்ளேன். பொருளாதாரமும் அரசாங்கமும் இல்லாத நாட்டையே பொறுப்பேற்றேன். பதில் ஜனாதிபதியாக பதவியேற்கக் கூட அரசாங்க அலுவலகம் ஒன்று இருக்கவில்லை. எனக்கு கட்சியும் இருக்கவில்லை. எனது கட்சியில் நான் மட்டுமே பாராளுமன்றத்தில் இருந்தேன். அதன்படி ஐக்கிய தேசிய கட்சியினர் என்று நம்பி ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒத்துழைப்பு கேட்டேன் ஒத்துழைக்கவில்லை டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்தனர்.
மக்கள் விடுதலை முன்னணி பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள விரும்பமில்லாத காரணத்தினால், அவர்களும் எனக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை. பின்னர் பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல் பீரிஸிடம் ஒத்துழைப்பு கேட்டேன். அவர் என்னை சந்திக்க கூட தயாராக இருக்கவில்லை. நான் பேசினேன் அவர் என்னோடு பேசக்கூட தயாராக இருக்கவில்லை. பின்னர் மஹிந்த ராஜகக்ஷவைச் சந்தித்து பேசினேன். அவர் ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்தார்.
அவ்வாறு ஆரம்பித்த அரசாங்கத்தில் நான் ஜனாதிபதியாக இருக்க எனக்கு ஒரு இடமிருக்கவில்லை. ஜனாதிபதி மாளிகையில் ஒன்றுகூடியிருந்த மக்கள் நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்தனர். எனது வீடு எரிக்கப்பட்டிருந்தது. அலுவலகமும் முற்றுகையிடப்பட்டிருந்தது. பிரதமர் அலுவலகம் மட்டும் எஞ்சியிருந்தால் அதன் மேல் மாடியில் நானும், கீழ் மாடியில் பிரதமர் தினேஸ் குணவர்தனவும் பணிகளை ஆரம்பித்தோம்.
அதன் பின்னர்தான் ஐ.எம்.எப் உடன் கலந்துரையாடி அடுத்தகட்ட பணிகளை ஆரம்பித்தோம். அனைவரும் ஒன்றுபட்டே பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை நான் அறிந்துகொண்டேன். அரசியல் செய்து இந்த நாடு சீரழிக்கப்பட்டிருந்தது. இலங்கை பெருமைக்குரிய நாடு. இந்த நாடு இந்த நிலைக்குச் செல்ல வேண்டியது அவசியமா? மகா வம்சத்தில் கூட இந்த நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்தாக குறிப்பிடப்படவில்லை.
கஷ்டமான தீர்மானங்களை நாம் எடுக்க வேண்டியிருந்தது. நாட்டுக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்பும் வரையில் காத்திருந்தோம். அமெரிக்காவின் சமந்தா பவரின் உதவியோடு, உலக வங்கியின் உதவியில் உரத்தைப் பெற்றுக்கொடுத்தோம். கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தோம். பணம் அச்சிட வேண்டாம் என்ற நிபந்தனையை ஐ.எம்.எப் விதித்தது. வங்கிகளிடத்திலிருந்து கடன் பெறவும் வேண்டாமென அறிவுறுத்தப்பட்டது.
சில நிவாரணங்களைத் தவிர்த்து வருமானங்களைத் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவற்றை செய்திருக்காவிட்டால் நெருக்கடியில் விழுந்திருப்போம். எந்த அளவு கஷ்டங்கள் வந்தாலும் எழுந்து வர முடியும் என்று நம்பினேன். இவ்வாறு முன்னோக்கிச் சென்ற போதும் பல முறை எதிர்கட்சியின் ஒத்துழைப்பை கோரினேன்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவர்களின் ஒத்துழைப்பைக் கோரினேன். அவர்கள் ஆதரவு வழங்க முன்வரவில்லை. நான் மக்களின் மேம்பாட்டுக்காகவும் நாட்டின் மேம்பாட்டுக்காவுமே பாடுபடுகிறேன் என்பதை அறிந்து அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் மக்களுக்காக சிறிதும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை.
உலக நாடுகளும் எமக்கு உதவ முன்வர கூடாதென அறிவிப்புக்களை வெளியிட்டனர். ஆனால் எமது பயணம் தொடர்ந்தது. எமக்கு கடன் வழங்கும் நாடுகள், ஐ.எம்.எப் அமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்புக்களும் இப்போது எம்மோடு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இலங்கையை இந்த நிலையிலிருந்து மீட்டெடுக்க முயற்சிக்கிறோம். இன்னும் சிறிது நாட்களில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டது என்ற அறிவிப்பு வரும். அதன் பின்னர் நம் முன்பிருக்கும் பல தடைகள் நீங்கிவிடும்.
தற்போதும் சில தடைகள் நீங்கியுள்ளன. எமக்கு உதவி வழங்கிய தரப்புக்கள் சில வேலைத்திட்டங்களுக்காக மீண்டும் நிதி வழங்குகின்றன. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளும் ஆரம்பிக்கப்படும். அவ்வாறான நிலையை தற்போது அடைந்திருக்கிறோம்.
எரிபொருள், உரம், மின்சாரம், மருந்து என அத்தியாவசியப் பொருட்கள் இருக்கவில்லை. வைத்தியசாலைகளும் பாடசாலைகளும் மூடிக்கிடந்தன. அந்த காலம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? கண்டிவீதியின் இந்த பகுதியில் காணப்பட்ட வரிசைகள் நினைவிருக்கிறதா? பியன்வில வரையில் வரிசைகள் நீண்டு காணப்பட்டன. வரிசைகளுக்கு இடம் போதவில்லை. அப்படியொரு நிலையே நாட்டில் இருந்தது. அவ்வாறான கஷ்டங்கள் எமக்கு மீண்டும் வேண்டுமா? அல்லது முன்னோக்கிச் செல்லப் போகிறோமா?
பிரச்சினைகள் உள்ளன. இருப்பினும் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். நான்கு வருடங்கள் தொழில் கிடைக்கவில்லை. தனியார், அரசாங்கம் என இரு துறைகளும் வழங்கவில்லை. வருமான வழிகளை உருவாக்க வேண்டும். இத்போது வௌிநாடுகளுக்கு பலர் செல்கிறார்கள். இன்னும் பல வருடங்கள் தொழில் இருக்காவிட்டால் மற்றுமொரு மக்கள் போரட்டம் வெடிக்கும். இன்று அவ்வாறன பிரச்சினைகளுக்கே முகம் கொடுக்கிறோம்.
நாட்டு மக்களின் வருமானத்தை மேம்படுத்த வேண்டும். முன்னேறிச் செல்ல வேண்டும். வளர்ச்சி கண்ட உலகத்துடன் இணைந்து பயனிக்க வேண்டும். இந்த அரசாங்கம் ஒருபோதும் வறிய மக்களை மறந்துவிடவில்லை. நாட்டின் வறுமை 25 சதவீதமாக காணப்படுகிறது. அதனைக் குறைப்பதற்கான முதல் முயற்சியாக சமூர்த்திக்கு மாறாக ‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் 3 மடங்கு அதிக கொடுப்பனவை வழங்கினோம். பயனாளிகள் எண்ணிக்கையை 18 – 24 இலட்சம் வரையில் அதிகரித்தோம்.
10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கினோம். மருந்துகள் தட்டுபாடின்றி கிடைக்கிறன. பிரச்சினைகள் குறைந்துள்ளன. இவற்றைப் பெற்றுக்கொடுத்த பின்னர் புரட்சிகரத் திட்டமான காணி உறுதிகளை வழங்க ‘உறுமய’ வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். அனுபத்திரம் உள்ள அனைவருக்கும் இலவசமாக காணி உறுதிகள் வழங்கப்படும். 20 இலட்சம் பேருக்கு அவ்வாறான உறுதிகள் வழங்கப்படவுள்ளன.
கொழும்பு நகருக்குள் 2 இலட்சம் பேருக்கு வீட்டின் உரிமைகளை வழங்கவுள்ளோம். தோட்டப் பகுதிகளை கிராமங்களாக பிரகடனப்படுத்தி வீடுகளை கட்டமைக்க நிதி நிவாரணங்களை வழங்குவோம். ஒரு மாதத்தில் 75 வருடத்தில் செய்ய முடியாத புரட்சியை செய்திருக்கிறோம்.
கிராமப் பகுதிகளிலேயே வறுமை அதிகமாகவுள்ளது. அதனை நிவர்த்திக்க விவசாய நவீமயமாக்கல் திட்டத்துடன் சுற்றுலா பயணிகள் வருகையை 50 இலட்சம் வரையில் அதிகரிப்பதற்கான திட்டங்களை ஆரம்பித்திருக்கிறோம்.
இதனால் சிறிய காணிகளிலும் பெருமளவு வருமானம் ஈட்டலாம். மக்களை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கவும் புரட்சிகர திட்டங்களை செயற்படுத்துகிறோம். அந்த முயற்சிகளை கைவிட முடியாது. அதற்காகவே பொருளாதார மாற்றச் சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம். இங்குள்ள இளையோர் தமது வருமானத்தை ஐந்து மடங்காக அதிகரித்துக்கொள்ள விரும்புகின்றனர்.
வறுமையிலிருந்து விடுபட எதிர்பார்க்கின்றனர். அதற்கு நாமும் ஒத்துழைக்க வேண்டும். கல்வி மறுசீரமைப்பு செய்யப்படும். அத்தோடு தொழில் கல்வியும் மறுசீரமைக்கப்படும். பல்கலைக்கழகங்கள் புதிதாக உருவாக்கப்படும். அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும். எமக்கு எதிர்காலம் இருக்க வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பியகம அபிவிருத்தி அடையாத பகுதியாக காணப்பட்டது. சிலர் சாக்குகளையும், பீடியும் தயாரித்தனர். கல்வி அமைச்சராக இந்த காலப் பகுதியில் இரண்டு வர்த்தக வலயங்களையும், மின் உற்பத்தி நிலையத்தையும், இப்பகுதியை சுற்றிலும் தொழிற்சாலைகளையும் அமைக்க வழி செய்திருக்கிறேன்.
இலங்கையின் மிகப்பெரிய தொழில் வலயமாக இந்த பகுதியை மாற்றியிருக்கிறோம். மற்றைய பகுதிகளில் ஏன் இதனை செய்ய முடியாமல் உள்ளது. இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையும் இங்கு கொண்டு வரப்பட்டது. இங்கு 160 ஏக்கரில் கேரகல பகுதியில் மூன்றாவது வர்த்தக வலயத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம்.
சுத்திகரிப்பு நிலையம் திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட பின்னர் சபுகஸ்கந்த அபிவிருத்தி செய்யப்படும். இதேபோல் கண்டி, யாழ்ப்பாணம், அநுராதபுரம், திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அதுவே எமது எதிர்காலமாக இருக்க வேண்டும்.
இந்நாட்டின் எதிர்காலத்தை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக கட்டமைக்க இடமளியேன். நாட்டின் தேவைக்கேற்ப அரசியல்வாதிகள் இசைந்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். சிங்களவர்கள் என்று கூறிக்கொண்டு யாசகம் செய்வதில் பயனில்லை. பெருமிதம் உள்ள மனிதர்கள் என்றால் முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கான மாற்றத்தை செய்வோம்.
போலி வாக்குறுதிகளை வழங்குவதில் பயனில்லை. அதனால் சஜித், அனுரவை எம்மோடு இணைந்து முன்னோக்கிச் செல்ல வருமாறு அழைக்கிறேன். கம்பஹா இலங்கையின் இதயமாகும். டீ.எஸ்.சேனநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்தன போன்றவர்கள் இங்குதான் உருவாகினர். ஐக்கிய தேசிய கட்சியினரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள். பண்டாரநாயக்கவும், டீ.எஸ். சேனநாயக்கவும் சுதந்திரத்துக்காக ஒற்றுமையாக செயற்பட்டனர்.
1971 ஆம் கலவரத்தின் காலத்தில் சிறிமாவோ பண்டாராநாயக்கவுக்கு ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு உதவி வழங்கினார். அதன் பின்னர் பிரேமதாசவின் காலத்திலும் சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் எமக்கு உதவி வழங்க முன்வந்தார். பாராளுமன்றத்தில் மோதினாலும் நாட்டைப் பாதுகாக்க அர்ப்பணித்திருக்கிறோம். சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் ஜனநாயகத்தைப் பாதுகாத்திருக்கிறோம். ஆசியாவில் எந்த நாட்டுக்கும் அந்த பெருமை இல்லை. நாம் இதே பாதையில் முன்னோக்கி செல்ல வேண்டும். மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல முடியாது. நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கிகொள்வோம். அழைப்புக்கு உரிய பதில் வழங்க வேண்டும். அதனை நேரம் வரும் போது கூறுவேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மற்றும் ஆளுங்கட்சி பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க,
”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று இன்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த மக்கள் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் வாழும் உரிமையை இழந்து கொண்டிருந்தனர். எரிபொருள், எரிவாயு, மருந்து எதுவும் இல்லாத ஒரு காலம் இருந்தது. அந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக பதவியேற்குமாறு அழைப்பு விடுத்தது.
கம்பஹா மாவட்டம் என்பது ஒரு சாதாராண மாவட்டம் அல்ல. அன்று கோட்டாபய ராஜபக்ஷ இந்த கம்பஹா மாவட்டத்தில் 365,000 மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இன்று சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து உங்களை அதே அளவு மேலதிக வாக்குகளுடன் வெற்றியடையச் செய்து உங்களுக்கு நன்றிதெரிவிக்க கம்பஹா மக்கள் செயற்படுவார்கள்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இன்று நாம் தொங்கு பாலத்தில் செல்கிறோம். வாய்ச்சொல் வீரனான அநுரகுமார தொங்கு பாலத்தை கடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தொங்கு பாலம் ஆபத்தானது. அனுபவம் இல்லாதவர்கள் தொங்கு பாலத்தில் செல்ல முடியாது. ரணில் விக்ரமசிங்க அவர்களால் மாத்திரமே இந்நாட்டு மக்களை தொங்கு பாலத்தைக் கடக்கச் செய்ய முடியும்.
2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியின் பின்னர் அவருக்காக முன்நிற்குமாறு கம்பஹா மாவட்ட மக்களே எனக்கு சக்தியை வழங்கினார்கள். இப்போதும் கம்பஹா மாவட்ட மக்களின் பலம் காரணமாகவே 2024 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக உழைக்க நான் முன்வந்துள்ளேன்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அடுத்த வாரத்திற்குள் தீர்மானம் எடுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இப்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். இங்கே வந்துள்ளவர்கள் அதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இனி உங்களுக்கு தப்பிக்க முடியாது ஜனாதிபதி அவர்களே. இந்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் போட்டியிட்டுத்தான் ஆக வேண்டும். கம்பஹா மாவட்ட மக்களின் தலைமையில் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் உங்களை வெற்றியடையச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்பதைக் குறிப்பிடுகின்றேன்” என்று தெரிவித்தார்.
சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண,
”இன்று கம்பஹாவிற்கு வந்துள்ள மக்கள் வௌ்ளத்தைப் பார்க்கும் போது நாம் ஒன்றும் யோசிக்கத் தேவையில்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு வருவார் என்பதில் சந்தேகமில்லை. கடவத்தை நகரம் நிரம்பி வழிகிறது. அண்மைக்கால வரலாற்றில் நாம் கண்ட மிகப்பெரிய மக்கள் வௌ்ளம் கடவத்தை நகரில் நிறைந்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர், கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு போன்ற அனைத்து துறைகளிலும் இலங்கை அபிவிருத்தி கண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நாட்டின் வளர்ச்சி குன்றியது. வருமானமும் குன்றியது. மக்கள் கஷ்டப்பட்டனர். அந்த நெருக்கடியான சூழலில் தீர்மானமிக்க பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை மிகவும் மரியாதையுடன் நினைவுகூருகின்றோம்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிவாரணம் வழங்கியது போல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். இவர்களைப் போலவே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாரும் நிவாரணம் வழங்கவில்லை.
இன்று நாட்டில் நிதி ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. வங்கி வட்டி வீதம் குறைந்து வருகிறது. வெளிநாட்டு கையிருப்பு 6 பில்லியன் டொலர்களைக் கடந்துள்ளது. பொருளாதாரம் நிலைபெற்று மக்கள் மத்தியில் நம்பிக்கை தோன்றியுள்ளது. அதனடிப்படையில், இந்த நாட்டை விரைவான மற்றும் பாரிய அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் ஒரு விமானியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நமக்கு கிடைத்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பயணத்தை தொடர்வோம்” என்று தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,
”ரணில் விக்ரமசிங்க ஐ.தே.க. உறுப்பினர் என்று சிலர் கூறுகின்றார்கள். ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் என்று இன்னும் சிலர் கூறுகின்றனர். ரணில் விக்ரமசிங்க மொட்டுக் கட்சி என்று சிலர் கூறுகிறார்கள். மேலும் சிலர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர்.
ஆனால் இன்று ரணில் விக்ரமசிங்க எந்தக் கட்சியிலும் இல்லாமல், நாட்டு மக்களின் கட்சியில் இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். அவருக்கு கட்சி இல்லை. நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிக்காரர்களிடம் பரிசோதனைகளைச் செய்வதன் ஊடாக, மீண்டும் ஒரு முறை தவறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது பரிசோதனைக்கான நேரம் அல்ல. மிகவும் சிரமப்பட்டு ஜனாதிபதி நாட்டை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.
அண்மையில் நாட்டிற்கு விஜயம் செய்திருந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்க போன்ற ஒரு தலைவரை இந்நாட்டு மக்கள் இழந்தால் அது இலங்கையின் அழிவாகும் என குறிப்பிட்டிருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்த பின்னர், அன்று 150 கூட்டங்களிலும் உரையாற்றிய என்னால், 3 வாரங்கள் வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர் ஒளிந்திருந்தார். குறைந்த பட்சம் கூட்டங்கள் நடத்துவதற்கு செலவான கட்டணத்தை கூட செலுத்தும் நிலையில் நாம் இருக்கவில்லை. ஆனால் இறுதியில் நாங்கள் அவரை கைவிட வேண்டியேற்பட்டது. அது வேறு எதனாலும் அல்ல. மக்கள் கஷ்டப்படும் நேரத்தில், சவாலை ஏற்காமல் தவிர்த்ததால் அவரைக் கைவிட நேரிட்டது. இவ்வாறான சவாலை ஏற்றுக்கொள்ள முடியாத தலைவர் இந்த நாட்டின் பொறுப்பை ஏற்கமாட்டார். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள அனைவரும் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கட்சித் தலைவர்கள் வெற்றி பெறும் தேர்தல் அல்ல. இந்தத் தேர்தல் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் தேர்தல் என்பதை நீங்கள் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். கம்பஹா மாவட்டம் இந்த நாட்டில் தேர்தல் ஒன்றில் மிக முக்கியமான மாவட்டமாகும். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பயணத்தைத் தொடர்வோம். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை யாரும் மாற்ற முடியாது. இந்தப் போராட்டத்தில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்” என்று தெரிவித்தார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த,
”இந்த நாட்டைப் பற்றி சிந்திக்கும், நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திப்போர் இன்று எம்மோடு இருக்கின்றனர். பண்டாரநாயக்க எனது மாமனார். உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க எனது அத்தையாவார். அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த நான், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டே நான் மிகக் கடினமான தீர்மானத்தை எடுத்தேன். பாராளுமன்றத்தில் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவுக்கு வாக்களித்த போது என் கைகள் நடுக்கம் கொண்டிருந்தன. ஆனால் இப்போது அவருக்கு கை நீட்டி வாக்களிப்பேன்.
அனுரகுமார திஸாநாயக்க கண்டிக்கு வந்து லொஹான் எங்கே என்று கேட்டார். “பிசாசுகளுக்கு பயந்தவர்கள் கல்லறையில் வீடுகளைக் கட்டுவதில்லை” என்று அவருக்கு சொல்ல விரும்புகிறேன். 88-89 காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி நாட்டுக்கு என்ன செய்தது என்பது சகலருக்கும் தெரியும். இன்று அக்கட்சியை ஆதரிக்கும் இளையோரை தவறாக வழிநடத்த வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். நாட்டை நேசிப்பவர்கள் நாட்டுக்கு பொருத்தமான தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே என்பதை அறிவர்.
உயரமானவருக்கு பாதுகாப்பு ஊழியர் வேலையும், உயரம் குறைந்தவருக்கு சாதாரண தொழிலும் வழங்கும் சஜித் பிரேமதாசவை போன்றவர்களால் ஒரு நாட்டை வழிநடத்த முடியுமா?
நான் மஹிந்த ராஜபக்ஷவின் வலது கரமாக இருக்கிறேன். அவ்வாறு இருக்கின்ற போதும் அடுத்த தசாப்தத்தில் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப கூடியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே என்பதை அறிந்தே அவருக்கு ஆதரவளிக்கிறேன். உங்களுக்காக சிறந்ததொரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியின் வேலைத்திட்டதுடன் கைகோர்த்துக்கொள்ளுங்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்த பின்னர் நாம் மீண்டும் கம்பஹாவில் தடம் பதிப்போம்” என்று தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே,
”ஒன்றிணைந்து வெல்வோம் கூட்டத்தொடரின் மூன்றாவது கூட்டம் இன்று கடவத்தையில் நடக்கிறது. காலியிலும், கண்டியிலுரும் இரு கூட்டங்களை நடத்தினோம். அந்த இரண்டு இடங்களையும் விட அதிகளவான ஆதரவாளர்களுடன் இன்று கூட்டம் நடக்கிறது. இவ்வாறதொரு அரசியல் கூட்டம் இலங்கையில் இதுவரை நடந்ததில்லை. இந்த கூட்டத்தில் பல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படும் பிரதிநிதிகளும் ஆதரவளார்களும் உள்ளனர்.
ஜனாதிபதிக்கும் இதற்கு முன்னர் இவ்வாறானதொரு மேடை கிடைத்ததில்லை. அனைவரும் நாட்டை விட்டு ஓடிய வேளையில், நாட்டு மக்கள் அநாதரவாக இருந்தபோது, நாட்டை மீட்டமைக்காகவே இன்று ஜனாதிபதிக்கு இவ்வாறான மேடையை அமைத்திருக்கிறோம். ஜனாதிபதி பதவியை ஏற்க ஜனாதிபதி எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.
அப்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்தது. நாட்டை மீட்க வேண்டும், மக்கள் பட்டினியில் சாகும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட உங்களுக்கு நிபந்தனையின்றி அடுத்த ஐந்து வருடங்களுக்கும் ஆட்சியைப் பொறுப்பேற்க ஆதரவளிப்போம்.
கட்சி அரசியல் செய்யவும் நாடு நன்றாக இருக்க வேண்டும். இந்த அரசியல் மேடையை விடவும் பெருமளவான அரசியல் மேடையை ஜனாதிபதிக்காக உருவாக்குவோம். இரண்டு வருட காலத்தில் சவாலை சாத்தியமாக வெற்றி கொண்ட நீங்கள் எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித்தர வேண்டும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இந்த நாட்டின் நிலை பற்றியும் வரிசை யுகம் பற்றியும் அனைவரும் அறிவோம். அந்த யுகத்தை மறந்துவிட முடியாது. மக்கள் வாழ முடியாத கடுமையான பொருளாதார நெருக்கடி காணப்பட்டது. அப்படியிருந்த நாட்டில் இன்று சுற்றுலாப் பயணிகள் நிறைந்து வழியும் அளவுக்கு நிலைமையை ஜனாதிபதியே உருவாக்கினார். அடுத்த முறையும் அனைவரும் ஒன்றுபட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப்,
”ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுகூட்டிய மக்களை விட, குறைந்தது ஒருவரையாவது அதிகமாக அழைத்து வருவதாகக் கூறிய சவாலில் வெற்றிகொண்டு, 15,000 இற்கும் அதிகமான மக்கள் இன்று இங்கு வருகை தந்துள்ளனர். அதற்கு எப்போதும் பலமாக இருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை இங்கு நான் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகின்றேன்.
நாடு பூஜ்ஜியமாக வீழ்ந்திருந்த போது அந்த சவாலை அச்சமின்றி எதிர்கொண்டு நிபந்தனையின்றி பொறுப்பேற்று நாட்டை இன்றைய நிலைக்கு கொண்டு வருவதற்கு பாரிய பங்காற்றியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அனைவரும் ஒன்றிணைந்தால் எத்தகைய சவாலையும் முறியடிக்க முடியும் என்பதை முழு உலகிற்கும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திருப்புமுனையே இன்றைய பொதுக் கூட்டம் என்பதை நான் நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன,
”இன்றைய தினம் கம்பஹா மாவட்டத்திற்கு விசேட தினமாகும். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அவரது இரண்டு வருட நிறைவு விழா இன்று கம்பஹாவில் நடக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கு புதிய அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இன்று இந்த மேடைகளைப் பார்க்கும்போது, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் உள்ளனர். அவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது நாட்டைப் பொறுப்பேற்க எந்த தலைவரும் முன்வரவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், இன்று இலங்கை எங்கே இருந்திருக்கும் என்பதை மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும். அவர் நாட்டைப் பொறுப்பேற்றார். பொருளாதாரத்தை மீட்டெடுத்தார் மற்றும் வாழக்கூடிய சூழலை உருவாக்கினார். அவரது வீட்டையும் கலகக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.
போராட்டத்தின் மூலம் அரசியல் குழுக்கள் நாட்டை தீக்கிரையாக்கி ஆட்சிக்கு வரலாம் என்று நம்பினர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது சொந்த வீட்டை எரித்த போதும் மக்களுக்காக முன் வந்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுத்தார்.
அன்று எரிபொருள், எரிவாயு வரிசைகள், மற்றும் பதினான்கு மணி நேர மின்வெட்டு இருந்தபோது எந்தத் தலைவரும் நாட்டைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. ரணில் விக்ரமசிங்கவே பொருளாதாரப் பிரச்சினையை மிக எளிமையான முறையில் தீர்த்து வைத்தார். அதைத் தாங்கிக்கொள்ள முடியாத அரசியல் குழுக்கள் இன்று மேடைகளில் ஏறி, சேறு பூசும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதோடு, அதன் மூலம் அதிகாரத்தைப் பெற முயற்சி செய்கின்றனர்.
ரணில் விக்ரமசிங்க முதலில் பிரதமராக பதவியேற்று பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மக்களுக்கு போதுமான எரிபொருள் மற்றும் எரிவாயுவை வழங்க ஏற்பாடு செய்தார். நாட்டிற்குப் போதிய அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் பொருளாதார நோக்கு அவருக்கு இருந்தது.
திறைசேரியில் இன்று 5.5 பில்லியன் டொலர்களுக்கு மேல் சேகரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு போதுமான அந்நியச் செலாவணி அரசாங்கத்திடம் உள்ளது. புதிய அரசியல் கலாச்சாரத்துடன் முன்னோக்கிச் சென்று நாம், அடுத்த தசாப்தத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை நிச்சயமாக வெற்றிபெறச் செய்ய கடுமையாக உழைப்போம். ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.” என்று தெரிவித்தார்.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரதிநிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு