கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை
வேறு மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
சிறைத்தண்டனைக்குப் பின்னர் ஞானசார தேரர் அதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார்.
மேன்முறையீடு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை தம்மை பிணையில் விடுவிக்குமாறு ஞானசார விடுத்திருந்த பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே அண்மையில் நிராகரித்திருந்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், ஞானசார தேரர் சமர்ப்பித்த சீராய்வு மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு அண்மையில் உத்தரவிட்டது.
மேலும், அவரது வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதித்து உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கும் உத்தரவிட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இன்று (22) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூரகல விகாரை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் காரணமாக இஸ்லாத்தை அவமதித்தமை மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவித்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு கடந்த நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது.