ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்பில் ஈரானில் ஹனியேவின் இறுதிக்கிரியை !

ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்பில் ஈரானில் ஹனியேவின் இறுதிக்கிரியை !

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மைல் ஹனியேவின் இறுதிக் கிரியை பெரும் திரளானோரின் பங்கேற்புடன் ஈரான் தலைநகர்
டெஹ்ரானில் நேற்று (01) இடம்பெற்றதோடு இந்தப் படுகொலை காசாவில் நீடிக்கும் போர் பிராந்திய அளவில் பரவும் அச்சுறுத்தலை அதிகாரித்துள்ளது.

ஈரான் தலைநகரில் வைத்து இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டதாக நம்பப்படும் நிலையில், அது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடி போர் ஒன்றுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இந்தப் படுகொலை தொடர்பில் இஸ்ரேல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.

இந்நிலையில் ஈரான் மண்ணில் நடத்தப்பட்ட தாக்குலுக்கு பதிலடியாக இஸ்ரேலுக்கு எதிராக நேரடிதாக்குதலை நடத்த ஈரான் உயர் மட்டத் தலைவர் ஆயதொல்லா அலிகமனெய் உத்தரவிட்டதாக ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இறுதிக் கிரியையில் உயர்மட்டத் தலைவர் முன்னின்று தொழுகை நடத்தினார். இதில் கறுப்பு நிற உடையுடன் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள் ‘இஸ்ரேல் ஒழிக’ மற்றும் ‘அமெரிக்கா ஒழிக’ என்று கோசம் எழுப்பினர்.

இறுதிக் கிரியையை அடுத்து அவரது உடல் காசாவில் இருந்து வெளியேறிய பின் அவர்
பெரும்பாலான காலம் தங்கி இருக்கும் கட்டாருக்கு எடுத்துச் செல்லப்பட்டதோடு அங்கு இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

‘அபூ அல் அபெத் இஸ்மைல் ஹனியே, அமைதி கொள்ளுங்கள். சியோனிச ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எமது நாடு, ஈரான், எதிப்பாளர்கள், உங்களது மக்கள், உங்களது போராளிகள் ஒன்றுபட்டுள்ளனர்’ என்று ஹமாஸ் பிரதித் தலைவர் கலீல் அல்ஹய்யா, காசாவில் இருந்து தொலைக்காட்சி வழியாக இறுதிக் கிரியையில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

கடந்த புதன்கிழமை அதிகாலையில் தனது மெய்க்காவலர் ஒருவருடன் ஹனியே படுகொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முன்னணி தளபதியான புவாத் ஷுக்ரி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவங்கள் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கும் சூழலில் ஐ.நா. பாதுகாப்புச் சபை நேற்று முன்தினம் அவசரமாகக் கூடியது. மத்திய கிழக்கை போர் பள்ளத்திற்குள் இஸ்ரேல் இழுத்துச் செல்வதை சர்வதேச சமூக நிறுத்த வேண்டும் என்று பலஸ் தீன தூதுவர் வலியுறுத்தியதோடு சீனா, ரஷ்யா மற்றும் அல்ஜீரிய நாடுகள் ஹனியேவின் படுகொலையை கண்டித்தன.

பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைப்பதற்கு ஈரான் ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் குற்றம்சாட்டியதோடு மத்திய கிழக்கில் முழு அளவில் போர் வெடிக்கும் அச்சம் பற்றி ஜப்பான் கவலை வெளியிட்டது.
பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக காசா போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

டெஹ்ரான் மற்றும் பெய்ரூட் தாக்குதல் ‘ஆபத்தான வகையில் மோதலை அதிகரிக்கச்
செய்யும்’ என்று ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டி காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்கி அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் உக்கிர தாக்குதல்கள் நேற்று (01) 300
ஆவது நாளை தொட்டது. மத்திய காசாவின் அல்மகாசி அகதி முகாமுக்கு அருகில் பொதுமக்கள் பயணித்த வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்றுக் நடத்திய தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

மத்திய காசாவில் நுஸைரத் அகதி முகாமில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் மேலும் நால்வர் கொல்லப்பட்டதோடு முன்னதாக அந்த முகாமில் இருக்கும் வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் மூவர் பலியானதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அல் ஜசீரா அரபு மொழி செய்தியாளர் இஸ்மைல் அல் கவுல் மற்றும் அவரது படப்பிடிப்பாளர் ராமி அல் ரிபி ஆகியோர் கொல்லப்பட்டனர். காசா நகரில் மேற்கே உள்ள ஷெட்டி அகதி முகாமில் இவர்கள் இருந்த கார் வண்டியை இலக்கு வைத்தே இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் அங்கு 113 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு என்ற அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 35 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 55 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளி
யிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,480 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 91,128 பேர் காயமடைந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )