IMF உடன்படிக்கையில்மாற்றங்கள் செய்யப்படும் !
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையிலுள்ள நிபந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், பொருளாதார வேலைத் திட்டத்தை உருவாக்க உள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிநாட்டுக் கடன்களோடு நாடு உள்ள நிலையில், அதனை செலுத்துவதற்காக ரூபாவன்றி டொலர்களே அவசியமாவ தாகவும் சபையில் தெரிவித்த அவர், ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, டொலர்களை சம்பாதிக்கும் வேலைத் திட்டங்களை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஏற்றுமதியைப் பிரதானமாகக் கொண்ட பொருளாதாரத்தின் மூலம் டொலர்களை சம்பாதித்துக் கொள்வதற்கு திட்டமிடப்படும் எனவும் ஹர்ஷ டி சில்வா எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் வரிச்சுமையைக் குறைத்து நிவாரணங்களை வழங்குவதற்கு
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பெற்றோல் விலையை 150
ரூபாவிலிருந்து 400 ரூபா வரை அதிகரித்தது.
அது அரசாங்கத்திற்கும் பெட்ரோலியக் கூட்டுத் தாபனத்திற்கும் இலாபமாகும்.
எமது மாற்றுக் குழுவொன்று தாம், அதிகாரத்திற்கு வந்ததும் பெட்ரோலின் விலையை 200 ரூபாவாக குறைப்பதாக குறிப்பிடுகின்றனர்.
நாம் அவ்வாறு கூறவில்லை. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக 400 ரூபாவை
வழங்கினாலும் அதில் 200 ரூபாவை மக்கள் வழங்குவதற்கும் மீதம் 200 ரூபாவை அரசாங்கம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தையும் நாம் உருவாக்குவோம்.
சாதாரணமக்களுக்கே இந்த திட்டம். பென்ஸ்காரில் வருபவர்களுக்கு, இரவில் 20
ஆயிரம் ரூபாவுக்கு உண்பவர்களுக்கு இந்த நிவாரணம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2024 முதல்காலாண்டில் பெற்றுக் கொள்ளப்பட்ட
பொருளாதார முன்னேற்றத்தை, தொடர்ந்தும் பலப்படுத்துவது தொடர்பிலான சபை
ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .