ஹட்டன் பஸ் விபத்து ; சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஹட்டன் பஸ் விபத்து ; சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹட்டன் தனியார் பஸ் விபத்து சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (26) மீண்டும் முன்னிலைப்படுத்திய போது, ​​சந்தேகத்திற்குரிய சாரதியை 01.07.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் எம்.பாரூக்தீன் உத்தரவிட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகனப் பரிசோதகரும் ஹட்டன் பொலிஸாரும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (26) உண்மைகளை முன்வைத்து சந்தேக நபர்களை அடுத்த மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானிடம் கோரினர்.

ஹட்டன் பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான் சந்தேக நபரின் விளக்கமறியலை  நீடித்து உத்தரவிட்டார்.

நாவலப்பிட்டி, நவ திஸ்பனையில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய பிரஷாசன்ன பண்டார என்பவரின் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.

  ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி கடந்த 21ஆம் திகதி பயணித்த தனியார் பேருந்து, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் மூவர் மரணமடைந்தனர். 51 பேர் காயமடைந்து, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எட்டுப்பேர், கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.  

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)