
அரசியல் பழிவாங்கலை கைவிட்டு, உண்மையான குற்றவாளிகளை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும்
” எல்லா பழிகளையும் ராஜபக்சக்கள் மீது திணிக்கும் அரசியல் பழிவாங்கலை கைவிட்டு, உண்மையான குற்றவாளிகளை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும்.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எயார்பஸ் விமான ஒப்பந்த கொடுக்கல், வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு நேற்று (27) அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த நாமல் ராஜபக்சவிடம் சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதன்பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”விடுமுறை நாளில்கூட எம்மை விசாரணைக்கு அழைக்கின்றனர். நாமும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம். எம்மை விசாரிப்பதற்கு காட்டும் ஆர்வத்தை மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் தற்போதைய அரசாங்கம் காண்பிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் பாதீட்டில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளையாவது நிறைவேற்றட்டும்.
நாட்டில் ஏதையாவது செய்துவிட்டு பழியை ராஜபக்சக்கள்மீது போட்டால், அந்நபர் தப்பிக்ககூடிய நிலை தற்போது காணப்படுகின்றது.
இந்நிலைமை நீடித்தால் எல்லா பழிகளையும் எம்மீது சுமத்திவிட்டு, உண்மையான குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள். எனவே, அரசியல் பழிவாங்கலை ஒருபுறம் வைத்துவிட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றேன்.” என தெரிவித்து்ளளார்.