4 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை

4 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை

நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 336 சபைகளுக்கே இப்போது தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அண்மையில் நடந்து முடிந்திருப்பதால் அச்சபைக்கான தேர்தல் இப்போது நடைபெறாது.

தற்போது தேர்தல்கள் நடைபெற வேண்டிய உள்ளூராட்சி சபைகளின் பட்டியல் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்), தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்), பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்) மற்றும் கல்முனை மாநகர சபை ஆகியவற்றுக்கான தேர்தல்களே இப்போது அறிவிக்கப்படவில்லை. இவை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற காரணத்தால் தேர்தல் அறிவிப்புகள் இந்தச் சபைகளுக்கு விடப்படவில்லை.

மன்னார் பிரதேச சபை, தெஹியத்தகண்டிய கண்டிய பிரதேச சபை, பூநகரி பிரதேச சபை ஆகியவற்றுக்காக 2023 இல் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாகவே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கின்றன.

இப்போது அந்த வேட்புமனுக்கள் முழுமையாக இரத்துச் செய்யப்பட்டு விட்டமையால் அந்த வழக்குகளை விலக்கிக் கொள்ளும்படி கோரி நகர்த்தல் பத்திரங்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் தேர்தல் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்படவிருக்கின்றன.

நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் அவற்றுக்கும் வேட்புமனுக்கள் கோரி, அவற்றுக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் நாடு முழுவதும் இந்தத் தேர்தலை நடத்துவதற்கான முயற்சியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு இருப்பதாகத் தெரிகின்றது.

கல்முனை மாநகர சபையைப் பொறுத்தவரை அந்த மாநகர சபையின் எல்லை நிர்ணயம் மீளச் செய்யப்பட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அது முடிந்த பின்னரே அங்கு தேர்தல் முன்னெடுக்கப்படும் எனத் தெரிகின்றது.

இவை தவிர்த்த 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச சபைகளுக்கான தேர்தல்களே இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)