
ரமலான் நோன்பு கடைபிடிக்காமல் முகமது ஷமி பாவம் செய்துவிட்டார் !
சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் இந்திய வீரர் முகம்மது ஷமி நோன்பு வைக்காமல் விளையாடியது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரும் மேலும் தெரிவிக்கையில்,
‘முகம்மது ஷமி நோன்பு வைக்காமல் விளையாடியது தவறு.
நோன்பு வைப்பது என்பது ஒவ்வொரு இஸ்லாமியர்களின் கடமை.
இதனால் நோன்பு வைக்காமல் முகமது ஷமி பாவம் செய்துவிட்டார்.
உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு ஆணோ, பெண்ணோ நோன்பு வைக்காமல் இருப்பது மிகப்பெரிய குற்றமாகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷமி, நோன்பு வைக்காமல் போட்டியின் போது தண்ணீர் குடித்திருக்கிறார்.
இதை பலரும் பார்த்திருக்கிறார்கள். அவரால் விளையாட முடிகிறது என்றால் அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
அப்படி இருக்கும்போது அவர் நோன்பு வைக்காமல் தண்ணீர் குடித்தால் ஒரு தவறான முன்னுதாரணமாக ஷமி விளங்குகிறார்.
இந்த தவறை ஷமி மீண்டும் செய்யக்கூடாது.
ஷமி தற்போது பாவம் செய்துவிட்டார். இதற்கு அவர் இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என விமர்சித்துள்ளார்.
ஆனால் இதற்கு, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் அறிஞரும் நிர்வாக உறுப்பினருமான மௌலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி, ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
‘பயணம் செய்பவர்கள் ரம்ஜான் நோன்பைத் தவிர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஒருவர் பயணத்தில் இருந்தாலோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ, நோன்பை அனுசரிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்று குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முகமது ஷமியைப் பொறுத்தவரை, அவர் ஒரு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்,
எனவே, நோன்பை அனுசரிக்காமல் இருக்க அவருக்கு விருப்பம் உள்ளது.
அவரைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.