இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தெரிவு

இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தெரிவு

பத்தாவது பாாராளுமன்றத்திற்கான இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தெரிவுசெய்யப்பட்டார்.

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி முன்மொழிந்ததுடன், எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க அதனை வழிமொழிந்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று முன்தினம் (11) பாராளுமன்றத்தின் இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

அத்துடன், ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவராக எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க தெரிவுசெய்யப்பட்டார். அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த குமார முன்மொழிந்ததுடன், சட்டத்தரணி சுசந்த தொடாவத்த வழிமொழிந்தார்.

அத்துடன், மற்றுமொரு பிரதி இணைத் தலைவராக (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன் முன்மொழிந்ததுடன், அஜித் பி.பெரேரா வழிமொழிந்தார்.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இந்த ஒன்றியம் ஸ்தாபிப்பது சமத்துவம், நீதி மற்றும் உள்ளடக்கிய தன்மை என்பன தொடர்பில் நாம் அனைவரும் இணைந்து எடுக்கும் ஒரு முக்கியமான படியாகும் என்று சுட்டிக்காட்டினார்.

இயலாமையுடைய நபர்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் திருப்தி அடைந்து சமமாக நடத்தப்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே தூரநோக்காக இருக்க வேண்டும் என்றும், அதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஏனைய சேவைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்யும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் புதிய தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா, தன்னை ஒன்றியத்தின் தலைவராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

பாராளுமன்றம் என்ற ரீதியில் இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் முழு நாடும் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை உணர்திறன் மிக்கதாகவும், நேர்மையானதாகவும் மாற்றுவதே ஒன்றியத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இயலாமைய உடைய நபர்களுக்காகத் தற்பொழுது நடைமுறையில் உள்ள 28 வருடங்கள் பழமையான சட்டத்தை மறுசீரமைத்து தற்காாலத்திற்குப் பொருத்தமான சட்டமாக மாற்றுவது, தற்பொழுது காணப்படும் தேசிய கொள்கையை எதிர்காலத்திற்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஒன்றியம் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

பொது நிறுவனங்களுக்கான அணுகல் வசதிகள் இயலாமையுடைய நபர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 14 வருடங்கள் கடந்துள்ளபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் தீர்ப்பை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்த ஒன்றியத்தின் ஊடாகத் தேவையான தலையீடு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)