
உலகின் அதிக எடை கொண்ட நபர் காலமானார்
உலகின் அதிக எடை கொண்ட மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மெக்சிகோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ (41) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
மெக்சிகோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ, கடந்த 2017ஆம் ஆண்டு சுமார் 600 கிலோ எடையுடன் இருந்ததன் மூலம் ‘உலகின் அதிக எடை கொண்ட மனிதர்’ என்ற சாதனையைப் பதிவு செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.
அதீத உடல் பருமன் காரணமாக அவர் கை, கால்களை அசைக்க முடியாமலும், படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாமலும் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்தார்.
இதனுடன் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளும் அவரை பாதித்திருந்தன.
மருத்துவர் ஜோஸ் அன்டோனியோ காஸ்டனெடாவின் கண்காணிப்பில் ஜுவான் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கடுமையான சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த டிசம்பர் 24ஆம் தி கதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

