
இறக்குவானையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு
இறக்குவானை, கொலின்ஸ் வீதி பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் ஒருவர் விழுந்து கிடப்பதாக நேற்று சனிக்கிழமை (03) மாலை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து, இறக்குவானை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். பின்னர் அந்த நபர் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, அவர் மெலிந்த உடல் அமைப்புடன் சுமார் 5 அடி 7 அங்குல உயரமுடையவராக காணப்பட்டதாகவும், தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும், உயிரிழந்த நபர் கருப்பு நிற சட்டையும், மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களைக் கொண்ட சாரமும் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

