ஊருபொக்க, மனன்கெட்டிய பகுதியில் பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு – பல்லாயிரக்கணக்கான மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு

ஊருபொக்க, மனன்கெட்டிய பகுதியில் பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு – பல்லாயிரக்கணக்கான மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு

ஊருபொக்க நகரின் மையப்பகுதியான மனன்கெட்டிய பகுதியில் பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் ஒன்று நேற்றுகண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

சிறிய வறட்சியின் போதும் ஊருபொக்க பகுதியில் கிணற்று நீர் வற்றிவிடுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், இதற்கு தீர்வாக நீர் பவுசர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும், ஆனால் இம்முறை அதுவும் நடைபெறவில்லை என பிரதேசவாசிகள் பிரதேச சபை மீது குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதனால் ஊருபொக்க நகரம், தம்பஹல வீதி, ஹுலங்கந்த வீதி, ஹீகொட வீதி, அமுஹேன்கொட, ஹொரகஸ்மண்டிய, கடுவன வீதி மற்றும் கீரபிட்டிய வீதி உள்ளிட்ட பல கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், ஹீகொட வைத்தியசாலை மற்றும் ஹுலங்கந்த, பட்டிகல, கீரபிட்டிய, கின்னலிய, பெரலபனாதர ஆகிய பாடசாலைகளின் அன்றாடச் செயல்பாடுகளும் முடங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீர் பற்றாக்குறையினால் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 50,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்ததாக பஸ்கொட பிரதேச சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், பஸ்கொட பிரதேச சபை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த பாரிய நீர் ஆதாரம் கண்டறியப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தென் மாகாணத்திற்கான நிலவியலாளர் இந்திரஜித் கமகே தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )