
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 33ஆவது நினைவு தினம்
நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 33ஆவது நினைவு தினம் இன்றாகும் இதனையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று காலை கொழும்பு ஆளுத்கடை நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீமான் ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலை முன்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
1993 மே முதலாம் திகதி, ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தின ஊர்வலத்தில் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கலந்துகொண்டிருந்தார்.
இந்த ஊர்வலம் கொழும்பு ஆர்மர் வீதியை வந்தடைந்த போது,
LTTE தற்கொலை குண்டுதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதலில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உட்பட 23 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் மேலும் சுமார் 60 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ரணசிங்க பிரேமதாச ஜூன் 23, 1924 அன்று கொழும்பில் பிறந்தார். கொழும்பு 10, புனித ஜோசப் கல்லூரியில் தனது கல்வியை நிறைவு செய்த அவர், ஏழை மற்றும் நலிந்த மக்களின் நலனுக்காக சமூக சேவையில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டினார்.
குறைந்த வருமானம் ஈட்டும் மக்களின் பொருளாதார, சமூக மற்றும் ஆன்மீக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட ஸ்ரீ சுச்சரித இயக்கத்தில் இணைந்த இளைஞர்கள் மதுபானம், புகைபிடித்தல் மற்றும் சூதாட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருந்தனர்.
ரணசிங்க பிரேமதாச மது அருந்தாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராகப் பணியாற்றினார். 1965 பொதுத் தேர்தலில் அதே தொகுதியில் இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசாங்கத்தின் முதன்மைச் அமைப்பாளர் (Chief Government Whip) மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் அவர் உள்ளூராட்சி அமைச்சராகப் பதவி உயர்த்தப்பட்டார். 1970 பொதுத் தேர்தலில் கொழும்பு மத்திய தொகுதியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தனவுடன் எதிர்க்கட்சியில் அமர்ந்தார்.
1977 ஆம் ஆண்டு மீண்டும் கொழும்பு மத்திய தொகுதியில் வெற்றி பெற்ற அவர், சபை முதல்வராகவும் உள்ளூராட்சி அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரதித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஜே.ஆர். ஜயவர்தன நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானபோது, 1978 பெப்ரவரி 23 அன்று பிரேமதாச அவர்கள் பிரதமராகப் பதவியேற்றார்.
ஐக்கிய நாடுகள் சபை ‘வீடற்றோர் ஆண்டு’ என அறிவித்ததைத் தொடர்ந்து, ஏழைகளுக்கு வீடுகளை வழங்குவதை தனது அரசியல் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகக் கொண்டார்.
ஏழைகளுக்கு உதவும் ஜனசவிய, வளர்ப்புப் பெற்றோர் திட்டம், கம்பெரலிய (கிராம உதயம்) திட்டம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தை கிராமப்புற மக்களுக்கு கொண்டு சென்ற நடமாடும் செயலகம் போன்றவை அவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.
கலை மற்றும் இசைக்காக டவர் ஹோல் அறக்கட்டளையை நிறுவியதுடன், மூத்த கலைஞர்களுக்கு ஓய்வூதியத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார்.
பொருளாதார ரீதியாக, அவர் தொடங்கிய ஆடைத் தொழிற்சாலைத் திட்டம் வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டுவதிலும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதிலும் முன்னோடியாக அமைந்தது.
ஜே.ஆர். ஜயவர்தன பதவி விலகிய பிறகு, அவர் நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
தனது சொந்தக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொண்டு வந்த அரசியல் குற்றச்சாட்டு முயற்சியைத் முறியடித்து உயிர் பிழைத்தார்.
அவரது பதவிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டது, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அவர் வெற்றி கண்டார்.
பிரேமதாசவின் மிகப்பெரிய சாதனைகள் வீடமைப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் நலிந்த மக்களின் மேம்பாடு ஆகிய துறைகளிலேயே அமைந்திருந்தன.
கிராம உதயம் , ஜனாதிபதி நடமாடும் சேவை, 200 ஆடைத் தொழிற்சாலைகள் போன்ற பல புதுமையான திட்டங்களுக்கு அவர் அடித்தளமிட்டார்.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில், ஒரு வருடத்தை ‘சர்வதேச வீடற்றோர் ஆண்டாக’ அறிவிக்க முன்மொழிந்தார். இது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1987 ஆம் ஆண்டு அந்தப் பெயரில் அனுஷ்டிக்கப்பட்டது.
தற்போதைய சமுர்த்தித் திட்டத்திற்கு முன்னோடியான ‘ஜனசவிய’ திட்டத்தின் ஸ்தாபகர் இவராவார்.
சுத்தமான நீர், நல்ல வீதிகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களுடன் கூடிய மாதிரி கிராமங்களை உருவாக்க ஊக்குவித்தார்.
ஜனாதிபதி பிரேமதாச தனது ஆடம்பரமான உத்தியோகபூர்வ இல்லத்தைத் தவிர்த்து, தனது சாதாரண வீட்டிலேயே எளிமையான வாழ்க்கையை நடத்தியதற்காக நன்கு அறியப்பட்டவர். மற்ற முன்னணி அரசியல்வாதிகளை விடவும் அவர் மிகக் குறைவாகவே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார்.
அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்த போதிலும், அவரது எளிமை மற்றும் சிறந்த தொலைநோக்குப் பார்வைக்காக அவர் இன்றும் நினைவு கூறப்படுகிறார்.

