ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபிலவிற்கு பிணை வழங்க வந்த போலி உறவினர்கள் விளக்கமறியலில் – கபிலவை மீண்டும் கைது செய்ய உத்தரவு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபிலவிற்கு பிணை வழங்க வந்த போலி உறவினர்கள் விளக்கமறியலில் – கபிலவை மீண்டும் கைது செய்ய உத்தரவு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவிற்கு, கடந்த 5ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று நெருங்கிய உறவினர்களின் சரீரப் பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பிணை கையெழுத்திடுவதற்காக நேற்று (06) மூவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

இவர்களில் இருவர் மீது சந்தேகம் கொண்ட நீதிமன்ற ஊழியர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில், அவர்கள் இருவரும் கேசலவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தாங்கள் கபில சந்திரசேனவை யாரென்றே தெரியாது என்றும், தலா 15,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு உறவினர்களாக நடிக்க வந்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் வசிக்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற குற்றச்சாட்டில், பிணை வழங்க வந்த இருவரையும் வரும் மே 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் நம்பிக்கையைத் தகர்த்த காரணத்தினால், கபில சந்திரசேனவிற்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்த நீதிமன்றம், அவரை மீண்டும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்தது.

இந்த போலி நபர்களுக்கு உறவினர்கள் என கிராம அலுவலர் சான்றிதழ் வழங்கியது எவ்வாறு என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )