
அதிமுகவுடன் கூட்டணி தொடர்பில் தலைவர் முடிவிடுத்தால் அதை கட்சி ஏற்றுக்கொள்ளும் – செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்
அதிமுகவுடன் கூட்டணி அல்லது ஆதரவு பற்றி தலைவர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் அப்படி ஒரு முடிவை தலைவர் எடுத்தால் அதனை திமுக ஏற்றுக்கொள்ளும் எனவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்ட மன்றத் தேர்தல் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ள நிலையில் ஆட்சியில் அமர்வது யார் என்பது தொடர்பில் நிமிடத்திற்கு நிமிடம் நிலைமைகள் மாறிக்கொண்டிருக்கின்றன.
1977-க்குப் பிறகு திமுக அல்லது அதிமுகவே தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துவந்த நிலையில்,சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இரு கட்சிகளுக்கும் மாற்றாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரிய அளவிலான வெற்றியை பெற்றிருக்கிறது.
அதேவேளை , தவெக 108 இடங்களை தனிப்பெரும்பான்மையாக வென்றிந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு போதுமான எண்ணிக்கையாக அது இல்லாததால், தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர்அழைக்காமலேயே இருந்து வருகிறார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் பிரபலங்களும் தமது அதிருப்தியை தெரிவித்து வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ள நிலையில், அக்கட்சி தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்திருக்கிறது.
அதேசமயம், மேலும் 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்பட்டு வரும் சூழலில், விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளின் ஆதரவை தவெக கோரி வருகிறது.
தங்களின் முடிவை நாளை அறிவிக்கப்போவதாக அக்கட்சியின் தலைவர்கள் கூறியிருக்கின்றனர்.
இதேவேளை அதிமுக மற்றும் திமுக இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

