
யாழ் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற நபர் ஒருவர் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாவாந்துறை – யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பங்கிராசா சுரேஷ்குமார் என்ற 41 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபருக்கும் அயல் வீட்டாருக்கும் இடையில் காணப்பட்ட ஒழுங்கை தொடர்பான பிரச்சினை குறித்து, அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதனையடுத்து, இரு தரப்பினரையும் பொலிஸார் நேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தியதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் சமாதானமாகச் செல்ல இணக்கம் தெரிவித்த நிலையில், குறித்த நபர் கதிரையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயக்கமுற்றுள்ளார்.
பின்னர் அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
மேலும், சடலத்தின் உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

