ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2015 ஆம் ஆண்டு அடைந்த தோல்விக்குப் பின்னர் துவண்டு விடவில்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2015 ஆம் ஆண்டு அடைந்த தோல்விக்குப் பின்னர் துவண்டு விடவில்லை

அரசிடம் பேரம் பேசும் சக்திகளாகத் தொடர்ந்தும் இருப்பதை விட பங்காளிகளாக மாற வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ப.மதனவாசன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (08) நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் தெரிவித்தார்.

மேலும் அவர் , “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளராக நான் நியமிக்கப்பட்டிருக்கின்றேன்.

ஒரு தூர நோக்குடன் பயணிக்க வேண்டிய தேவை தமிழ்ச் சமூகத்துக்குத் தற்போது இருக்கும் காரணத்தால் இந்த நியமனத்தை நான் ஏற்றுக்கொண்டிருக்கின்றேன்.

பேரம் பேசும் சக்திகளாகத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கின்றது. எமது கட்சி இந்தப் பேரம் பேசும் சக்தி எனும் விடயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அந்த ஆட்சியின் பங்காளர்களாகத் தமிழ் மக்களும் இருக்க வேண்டும்.

இதன்மூலம் தமிழ் மக்கள் உரிமையோடு சேர்ந்து பயணிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2015 ஆம் ஆண்டு அடைந்த தோல்விக்குப் பின்னர் துவண்டு விடவில்லை. மீண்டும் 2019 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களினூடாக எழுச்சி பெற்றது.

இப்போது எமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ கட்சியைப் பொறுப்பெடுத்துள்ளார். அவரது தலைமையின் கீழ் இளைய தலைமையினர் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பயணிக்கக் காத்திருக்கின்றனர்.

இது ஒரு தூரநோக்கு அரசியல் பயணம். எடுத்த மாத்திரத்திலேயே நாட்டின் அரசியல் போக்கை மாற்றிவிட முடியும் எனச் சொல்லவில்லை. நீண்ட கால அடிப்படையில், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எமது பயணம் அமையும்.

இம்முறை நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 339 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெறுவது உறுதியாகியிருக்கும் சூழலில், பெரும்பான்மையான இடங்களில் மொட்டுச் சின்னத்திலும், சில இடங்களில் பங்காளிக் கட்சிகளுடனும் சேர்ந்து பயணிக்கக் கூடிய சூழ்நிலைகள் இருக்கின்றன.

இம்முறை பாரிய வெற்றியைக் கொண்டு வரக்கூடிய சூழ்நிலை இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட தொகுதிகளில் எம்மால் மாற்றங்களைக் கொண்ண்டுவர முடியும். சமகால அரசின் வாக்குறுதிகள் மற்றும் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டு அவர்களைத் தெரிவு செய்யக்கூடிய சூழல் களத்தில் காணப்படுகின்றது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)