
அவசர காலத்தில் யார் உண்மையில் நாட்டுக்காக செயற்பட்டார்கள் என்பதையும் மக்கள் புரிந்தே வைத்துள்ளனர்
‘‘நீண்டகாலமாக, இலங்கைக்காக நான் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறேன். இறையாண்மையைப் பாதுகாக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நான் முழு முயற்சியுடன் செயற்பட்டேன். போர்க்களத்தில் தேசிய பாதுகாப்பு விடயங்களிலும் நாட்டுக்கு எதிரான வெளிநாட்டுத் தலையீட்டை எதிர்கொள்வதிலும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளேன்.
இருப்பினும், நான் உள்ளிட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரிய, ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக இங்கிலாந்து விதித்துள்ள அநியாயமான தடைகளை சந்தித்துள்ளோம். இந்தத் தடைகள் நீதியானவையல்ல.
இது சர்வதேச அரசியல் உந்துதலின் நேரடி விளைவாகும்’’ என்று முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் , ‘‘இது பயங்கரவாதத்துக்கு எதிரான போர்: உயிர் பிழைப்புக்கான போராட்டம். இலங்கை யுத்தத்தை நாடவில்லை. ஆனால் பயங்கரவாதம் எங்கள் நாட்டை மிரட்டியபோது, எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.
உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள் நீண்டகாலம் கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் தற்கொலைக் குண்டுவெடிப்புகளினூடாக நாட்டிலிருந்த நிரபராதிகளை அச்சுறுத்திக்கொண்டிருந்தது.
சர்வதேச சமூகமானது அமைதியாக இருந்தபோதும், இந்த கொடூரத்துக்குப் முற்றுப்புள்ளி வைக்க இலங்கை ஆயுதப் படைகள் கடினமான முடிவுகளை எடுக்க நேர்ந்தது.
இலங்கை கடற்படைத் தளபதியாக எனது பங்கை எண்ணி பெருமை கொள்கிறேன். எல்.ரி.ரி.ஈக்கான சர்வதேச விநியோக வழிகளை இல்லாதொழிப்பதை உறுதிப்படுத்தினேன்.
ஆயுதங்கள், குண்டுகள் மற்றும் வெளிநாட்டு ஆதரவில்லாமல், அவர்களின் போராட்ட திறன் வீழ்ச்சியை கண்டது. கடற்படையுடன் சேர்ந்து, தரைப்படையும் விமானப்படையும் மேற்கொண்ட தீர்க்கமான செயற்பாடுகள், பயங்கரவாதத்தை முறியடித்து இலங்கையில் அமைதியை மீண்டும் நிலைநாட்டக்கூடியதாக இருந்தது.
எனவே, பிரித்தானியாவினால் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடைகள் வெளிப்படையான விசாரணை அல்லது சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை.
மாறாக, இலங்கையின் இராணுவ வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர்களை குறிவைக்கின்ற சர்வதேச அழுத்தத்தின் விளைவை பிரதிபலிப்பதாக இது அமைந்துள்ளது.
இலங்கை பயங்கரவாதத்தால் முற்றுகையிடப்பட்டிருந்தபோது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத இதே வெளிநாட்டு அமைப்புகள், இப்போது ஆயுதப்படைகளை குறிவைக்கின்றன.
பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையின் சவால்கள் முடிவடையவில்லை. நாட்டை பலவீனப்படுத்துவதற்கான பல்வேறு உள்ளக மற்றும் வெளிப்புற முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்த ஒருவராக, எங்கள் தேசிய நலன்களுக்கு எதிராக செயற்படும் சக்திகள் குறித்து நான் நன்கறிவேன்.
இதில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்கள், வெளிநாட்டுத் தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் மற்றும் தனிப்பட்ட இலாபத்துக்காக அரசியல் முடிவுகளை மேற்பார்வை செய்ய முயன்றவர்களும் அடங்குகிறார்கள்.
2022ஆம் ஆண்டு மே 09ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகள், துரோகம் மற்றும் வெளிநாட்டு தலையீட்டால் குழப்பத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன. சவால்கள் இருந்தபோதிலும், நான் இலங்கைக்கு நம்பிக்கையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
எனது தனிப்பட்ட ஆசைகளுக்கு அப்பால் நான் எப்போதும் நாட்டை உயர்வாகக் கருதுகிறேன். எதிர்காலத்திலும் அவ்வாறே செயற்படுவேன். சர்வதேச அரசியல் நோக்கமுள்ள தடை மற்றும் எந்த உள்ளக துரோகத்தாலும் எனது உறுதியான நம்பிக்கையை சீர்குலைக்க முடியாது.
இலங்கை மக்கள் உண்மையை அறிந்து வைத்துள்ளார்கள். அவர்கள் 30 வருடகால போரைச் சந்தித்துள்ளார்கள். அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நன்கறிவார்கள்.
அவசரக் காலத்தில் யார் உண்மையில் நாட்டுக்காக செயற்பட்டார்கள் என்பதையும் மக்கள் புரிந்தே வைத்துள்ளனர். இந்தத் தடைகளால் நாட்டைப் பாதுகாத்தவர்களின் பாரம்பரியத்தை வரையறுக்க முடியாது. இலங்கை இதற்கு முன்பே பெரிய சவால்களை வென்றுள்ளது.
தொடர்ந்தும் வெல்லும். மேலும் மீண்டும் வெல்லும். ஒரு தேசமாக, வெளிநாட்டு மற்றும் உள்ளக சக்திகள் எங்களை பலவீனப்படுத்தும் முயற்சிகளை எதிர்கொள்ள, எச்சரிக்கையாக, ஒன்றிணைந்து, உறுதியாக இருக்க வேண்டும்.’’ என தெரிவித்துள்ளார்.