
திருமண வரம் அருளும் பங்குனி உத்திர விரதம்
பங்குனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில், பல்வேறு சிறப்புமிகு நிகழ்வுகள் நடைபெற்றிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த சிறப்பான நாளில்தான், பல தெய்வத் திருமணங்கள், தெய்வ அனுகூலம் ஏற்பட்ட பல காரியங்கள் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
மாதம் தோறும் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம்தான் ‘பங்குனி உத்திரம்’ என்று சிறப்பித்து கூறப்படுகிறது. மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருமணம், ஆண்டாள்- ரெங்கநாதர் திருமணம், ராமர்- சீதை திருமணம் உள்ளிட்ட பல தெய்வங்களின் திருமணங்கள் இந்நாளில் நடந்தேறி இருக்கின்றன. எனவே பங்குனி உத்திர நாளில் மேற்கொள்ளும் விரதத்தை ‘கல்யாண விரதம்’ என்றும் அழைப்பார்கள்.
இந்த சிறப்புமிக்க நாளில் சிவபெருமானையும், அவரது மகன் என்று புராணங்கள் சொல்லும் முருகப்பெருமானையும் விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. திருமணம் தடைப்படுபவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.
பக்தர்கள் வேண்டும் வரங்களைத் தந்தருளும் தெய்வங்களை, தேவர்கள் பலரும் இந்த பங்குனி உத்திர நாளில் வழிபட்டு வரம் பெற்றுள்ளனர். விஷ்ணுவின் திருமார்பில் திருமகள் இடம் பிடித்தது, இந்த விரதத்தை கடைப்பிடித்துதான்.
தேவர்களின் தலைவனான இந்திரனும் இந்த விரதத்தை மேற்கொண்டு, இந்திராணியை கரம் பிடித்திருக்கிறான். பிரம்மன் சரஸ்வதியை தன் நாவில் குடிகொள்ளச் செய்ததும், சந்திரன் இருபத்து ஏழு அழகு வாய்ந்த நட்சத்திரப் பெண்களை மணம் முடித்ததும் கூட இந்த விரதத்தை மேற்கொண்டுதான்.
இந்த விரதத்தை கடைப்பிடித்தவர்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் எண்ணிலடங்காதவர்கள். திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய விரதம் இது.
பங்குனி உத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பார்வதி விரதம் இருந்து சிவபெருமானை மணாளனாக அடைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒருமுறை சாபம் காரணமாக, தக்கன் என்பவனுக்கு மகளாகப் பிறந்தாள், உமாதேவி. தாட்சாயணி என்ற பெயருடன் சிறுவயது முதலே சிவனின் மீது விருப்பம் கொண்ட அன்னை, தவம் இருந்து சிவனை மணம் செய்து கொண்டாள்.
ஆனால் தக்கன், சிவபெருமானுக்குரிய மரியாதையை வழங்கவில்லை. அவருக்கு சேரவேண்டிய அவிர்பாகத்தைக் கூட கொடுக்காமல், மற்ற தேவர்கள், முனிவர்களை அழைத்து யாகம் செய்தான். இதனால் வெகுண்டெழுந்த தாட்சாயிணி யாக குண்டத்தில் விழுந்து, அந்த யாகத்தை பலனற்றதாக மாற்றினாள்.
தக்கனுக்கு மகளாக பிறந்த காரணத்தினால் ஏற்பட்ட களங்கத்தை போக்கி கொள்வதற்காக, பார்வதி என்ற பெயருடன் மலையரசன் இமவான் மகளாக தோன்றினாள். காஞ்சிபுரத்தில் கம்பை ஆற்றில் மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டார்.
திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. ஆற்று நீரில் மணல் லிங்கம் சிதைந்து விடுமே என்று, அந்த லிங்கத்தை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். பார்வதியின் அன்பை பார்த்து வியந்த பரமேஸ்வரன், சிவலிங்கத்தில் வெளிப்பட்டு அவளை திருமணம் செய்து கொண்டார். அந்நாளே பங்குனி உத்திர திருநாள் ஆகும். பங்குனி உத்திரத்தன்று சிவாலயங்களில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
விரதம் இருக்கும் முறை
பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது உள்ளவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். பங்குனி உத்திரம் அன்று விரதம் இருப்பவர்கள் காலை எழுந்து நீராடி விட்டு, சிவபெருமானுக்கும் உமையன்னைக்கும் அபிஷேக, ஆராதனை செய்து தூப – தீபம் காட்டி, நைவேத்தியங்களை படைத்து வழிபட வேண்டும்.
அந்த பூஜை நேரத்தில் ஒரு தம்பதியினரை அழைத்து வந்து, அவர்களை வணங்கி தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும்.
பின்னர் சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். விரதத்தின் போது மவுனமாக இருப்பது சிறப்பு.
அன்று முழுவதும் இறைவனைப்பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றைப் படிக்கலாம். இறைவனின் நாமாவளிகளைக் கூறலாம். பட்டினி கிடந்து பசித்திருக்க வேண்டும்.
துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப்படுக்கவேண்டும்.
தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை பெறுவார்கள் என்கின்றன புராணங்கள்.