
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 802 பேர் கைது
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 802 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசேட நடவடிக்கையின் போது நாடு முழுவதும் 791 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்போது, 387 கிராம் ஹெரோயின், 656 கிராம் ஐஸ், 530 கிராம் கொக்கேயின், 23 கிலோ 744 கிராம் கஞ்சா, 30 கஞ்சா செடிகள், 1 கிராம் குஷ், 120 கிராம் ஹசீஸ், 138 போதை மாத்திரைகள், 1 கிலோ 110 கிராம் 210 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகள் மற்றும் 1 கிலோ 440 கிராம் மாவா போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களில் 11 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

