
திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார்.
ராஜஸ்தானில் அமைந்துள்ள தனது சொந்த ஊரான உதய்பூருக்குச் சென்றிருந்த நிலையில், ஏற்பட்ட கார்விபத்தில் கடுமையாக காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அங்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆர்.பி. சௌத்ரி, தமிழ் திரைப்பட உலகில் பல வெற்றிப் படங்களை உருவாக்கியவர்.
‘புது வசந்தம்’, ‘நாட்டாமை’, ‘பூவே உனக்காக’, ‘ஆனந்தம்’, ‘திருப்பாச்சி’ உள்ளிட்ட பல படைப்புகள் அவரது தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக மூன்று முறை ஃபிலிம்பேர் விருதுகளும் பெற்றுள்ளார்.
ஆர்.பி. சௌத்ரியின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

