செப்.15 இற்கு முன் 73.5 கோடி டொலர் கடனை செலுத்தாவிட்டால் ஆபத்து
வெளிநாட்டு வணிகக் கடன் உரிமையாளர்களுக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் 732 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த தவறினால் அவர்கள் வழக்கு தொடுப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். அவ்வாறான நிலை ஏற்பட்டால் நாடு வங்குரோத்தடைவதை தவிர்க்க முடியாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் நிஷாந்த சிறீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று முன் தினம் (01) நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம் கடன் செலுத்தத் தவறி இருப்பதாகத் தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்த போது, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தில் அந்த விடயங்கள்
உள்வாங்கப்பட்டுள்ளதால், நாணய நிதியம், அது தொடர்பாக அமெரிக்க ரிசேர்வ் வங்கிக்கு தெளிவுடுத்தியதால் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை பிற்போட்டுள்ளது.
அடுத்த வருடத்துக்கான வரவு-செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியுடனே தயாரிக்கப்படவிருக்கிறது. தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றால், நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை அவ்வாறே முன்னெடுத்து செல்வதாக தெரிவித்திருக்கிறார்.
ஆனால், சஜித், அநுர யாராவது வெற்றிபெற்றால், அவர்கள் நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை திருத்துவதாக தெரிவித்திருக்கின்றனர். நாணய நிதியம் இவர்களின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து, ஒதுங்கிக்கொண்டால்,என்ன செய்வது? நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.
அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ள தங்களின் கொள்கை பிரகடனங்களில், ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை பிரகடனத்திலேயே நாட்டை கட்டியெழுப்பி, பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏனைய வேட்பாளர்களின் கொள்கை பிரகடனங்களில் நாட்டின் உண்மையான பிரச்னைக்கு தீர்வு இல்லை. வெறும் வாக்குறுதிககளையே அவர்கள் அளித்து வருகின்றனர். சஜித் பிரேமதாஸவும் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டிக்கு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
வங்குரோத்து அடைந்த ஒரு நாடு இரண்டு வருடங்களில் உலகில் எந்த நாடும் இயல்பு நிலைக்கு வந்ததில்லை. ஆனால், ரணில் விக்ரமசிங்க இரண்டு வருடங்களில் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவந்துள்ளதையிட்டு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன ஆச்சரியமடைந்துள்ளன. ரணில் விக்கிரமசிங்கவின் திறமையும் அனுபவமுமே இதற்கு காரணமாகும்” என தெரிவித்துள்ளார்.