தமிழின அழிப்பு வரலாற்றை மூடிமறைக்கும் அரசாங்கங்கள் !
தமிழர் மீதான இன அழிப்பின் வரலாற்றை மூடி மறைக்கும் முயற்சியில் அரசாங்கங்கள் ஈடுபடுகின்றன என்று தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன்
குற்றஞ்சாட்டியுள்ளார்.
சத்துருக்கொண்டான் படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவுதினமான நேற்று நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ சத்துருக்கொண்டானை சூழவுள்ள கிராமங்களில் வசித்த 186 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனை இராணுவத்தினர் மாத்திரம் செய்யவில்லை. இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்தே இந்தப் படுகொலையை செய்திருந்தார்கள்.
இன்று 34ஆவது நினைவேந்தலை அனுஷ்டிக்கும் போது, வழமை போன்று, நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள், படுகொலை சம்பவம் தொடர்பில் வெளிப்படுத்தும் பதாகைகளை காட்சிப்படுத்த முயன்றனர்.
அது பொலிஸாரால் அத்துமீறி அகற்றப்பட்டமை கண்டிக்கத்தக்கது.
வரலாறுகளை மறைக்கின்ற நடவடிக்கையைத்தான் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
இனப்படு கொலையை இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவற்படையினரும் செய்தனர் என்பது இன்று, நேற்றல்ல 34 வருடங்களுக்கு முன்பே எமக்குத் தெரியும். நான்
இதனை பலமுறை பாராளுமன்றத்திலும் பதிவு செய்துள்ளேன்.
கடந்த காலங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்குபற்றும்போதும் வெளிப்படுத்தியிருக்கின்றேன்.
1990ஆம் ஆண்டு எம்மை பிரித்தாளுகின்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஒரு சிறுபான்மை இனத்திலிருந்து, இன்னொரு சிறுபான்மை இனத்தைப் பிரித்து முஸ்லிம் ஊர்காவல் படையினரை உருவாக்கியதில் வெற்றி கண்டார்கள்.
சத்துருக்கொண்டான் படுகொலை, கிழக்குப் பல்கலைக்கழக படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை இவற்றை செய்தவர்கள் இராணுவத்துடன் சேர்ந்திருந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரே.
இதில் எவ்விதமாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
உண்மையை வெளிப்படுத்துவதில் எமக்குத் தயக்கமும் இல்லை. 34ஆவது நினைவேந்தல் தினமான இன்று, இந்தப்படுகொலையில் ஆகுதியான அனைத்துப் பொதுமக்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்துகின்றோம். 34 வருடங்களாக இப்படுகொலைக்கான நீதிக்காக ஏங்கித் தவிக்கின்றவர்களுக்கு இன்னமும்
நீதி வழங்கப்படவில்லை’ என்று தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன்
தெரிவித்துள்ளார்