பிரேமதாச உயிருடன் இருந்தால் ரணிலையே ஆதரித்திருப்பார்
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உயிருடன் இருந்திருந்தால் அவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே ஆதரித்திருப்பார் என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“சஜித்துக்கு ஆதரவளித்து அமைச்சுப் பதவி வாங்க நான் விரும்பவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே எமக்கு அரசியல் கற்பித்தார். இன்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் பலர் அடுத்த பாராளுமன்ற தேர்தலை வெற்றிகொள்ள முடியுமா என்ற சந்தேகத்துடன் இருக்கிறார்கள். நாம் எந்த கட்சியில் இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே எமது தலைவராவார்.
ரணசிங்க பிரேமதாச இப்போது உயிருடன் இருந்திருந்தார் என்றால் அவரும் ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவளித்திருப்பார். அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அவரைப் பாதுகாத்தார். எனவே பிரேமதாசவின் குடும்பத்தார் நன்றி மறந்தாலும் அவர் உயிரோடு இருந்திருந்தால் நன்றிக்கடன் செலுத்தியிருப்பார்.
எனவே நெருக்கடியால் கஷ்டப்பட்ட மக்களும் அந்த கஷ்டங்களுக்கு முடிவுகட்டிய தலைவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.