நாட்டுக்கு இன்று தேவைப்படுவது மாற்றம் அல்ல, நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம் !

நாட்டுக்கு இன்று தேவைப்படுவது மாற்றம் அல்ல, நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம் !

2022ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது பாராளுமன்ற அதிகாரத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த பாடுபட்டதாகவும், இன்று நாட்டைக் கட்டியெழுப்பும் புரட்சியை முன்னெடுப்பதற்காக மக்களின் ஆணையைக் கோருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி போட்டியில் இருந்து நான் ஒதுங்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தான் சஜித் மற்றும் அனுரவைப் போன்று ராஜினாமா செய்யும் அல்லது ஓடிப்போகும் நபரல்ல என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பின்வாங்கி ஓடிச் செல்லாது துணிச்சலோடு முன்நோக்கிப் பயணிக்கும் பாடத்தை மட்டுமே சஜித்திற்கு கற்பிக்க முடியாமல் போனதாக தெரிவித்த ஜனாதிபதி, அதனை கற்பதற்காக தம்முடன் இணைந்து கொள்ளுமாறும் அவருக்கு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இன்று (15) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

சஜித்தும் அநுரவும் மாற்றம் பற்றி பேசினாலும், நாட்டிற்கு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டமே தேவை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்வரும் 5 வருடங்களில் இந்த நாட்டில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்தி புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாக மக்களுக்கு உறுதியளித்தார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அனுஷ விமலவீர, தேசிய மக்கள் சக்தியின் குண்டசாலை தொகுதி அமைப்பாளர் சிசிர குமார செம்புவத்த மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விவகார செயலாளர் ஒ.கே. நவாஸ் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து இணைந்து கொண்டனர்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

”இரண்டு ஆண்டுகளுக்கு முன், மக்கள் தேர்தல் நடத்தக் கேட்கவில்லை. தேர்தலொன்றை நடத்த முடியும் என்று மக்கள் நினைத்திருக்கவில்லை. ஆனால் இன்று மக்கள் பணம் சம்பாதிக்கின்றனர். இந்த நீண்ட வார இறுதியில் கண்டி, நுவரெலியா, பண்டாரவளை ஆகிய பகுதிகளுக்கு வந்துள்ள மக்களைப் பார்க்கும் போது, ​​நாடு அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தைக் காணலாம்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சியை ஏற்க அன்று இவர்கள் முன்வந்திருந்தால் நான் இங்கு வர வேண்டிய அவசியமே இருந்திருக்காது. பிரதான வேட்பாளர்களான நாங்கள் மூவரும் இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர்கள். 1977இற்கு முன்னரே எனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்தேன். ஜே.ஆர் ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, காமினி திஸாநாயக்க, லலித் அதுலத்முதலி, காமினி அத்துகோரள ஆகியோருடன் நானும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்தோம். அவர்களில் இன்று நான் மட்டும் எஞ்சியிருக்கிறேன். எனவே ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி மகாவலி திட்டத்தை ஆரம்பித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுரவை கோட்டேவை தலைநகராக மாற்றினார். ஜே.வி.பி பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ பெரும் பங்களிப்பை செய்தார். அதன்போது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி எமது தொழில் மூலோபாயங்களை முன்வைத்தோம். இந்தப் பணி இலங்கை வரலாற்றில் ஒரு சாதனை என்றே கூற வேண்டும். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை முன்வைக்கப்பட்ட போது அவரைக் காப்பாற்றியது நான்தான். நான் அவரைக் காப்பாற்றவில்லை என்றால் சஜித் பிரேமதாச இன்று அரசியலில் ஈடுபட்டிருக்க முடியாது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மரணத்தின் போது, ​​அந்தப் பொறுப்புகளை நான்தான் ஏற்றுக்கொண்டேன். அந்த சமயத்தில் எனது நண்பர்களான லலித், காமினி ஆகியோரை விட்டுவிட்டு கட்சியுடன் இருந்தேன். முன்னாள் ஜனாதிபதியின் ரணசிங்க பிரேமதாசவின் மகனான சஜித் தனது தந்தையின் கொள்கைகளுக்கு துரோகம் இழைத்தமைக்கு வருந்துகிறேன். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு என்ன உரிமை இருக்கிறது என்று தெரியவில்லை.

2020 பாராளுமன்றத் தேர்தலின் போது இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படப் போகும் சேதத்தை நான் முன்கூட்டிக் குறிப்பிட்டேன். ஆனால் அதை யாரும் ஏற்கவில்லை. நாம் சொன்னது போல் இந்த நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. 2022இல் பொருளாதாரம் சரிந்த போது நான் நாட்டைப் பொறுப்பேற்றேன். அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கேட்டேன். சஜித் எனக்கு ஆதரவு வழங்கவில்லை. மாறாக ஜீ.எல்.பீரிஸுடன் இணைந்து டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்து சஜித் பிரதமராகத் தயாரானார். சஜித் என்னிடம் பிரதமர் பதவியை கேட்டிருந்தால் நான் அதனைப் பெற்றுக் கொடுத்திருப்பேன்.

இன்று முன்னாள் விவசாய அமைச்சர் அநுரவும் சஜித் பிரேமதாசவும் என்னுடன் போட்டியிடுகிறார்கள். அன்று நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து மக்களை வாழ வைக்கும் பொறுப்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஏன் இந்தப் பொறுப்பை அவர்கள் ஏற்கவில்லை? இன்று அனைத்தையும் இலவசமாக தருவதாக உறுதியளிக்கின்றனர். அன்று ஏன் இவற்றைச் செய்யவில்லை என்று அவர்களிடம் கேட்கிறேன்.

அரசியல்வாதிகள் ஏன் சாதாரண மக்களை கைவிட்டார்கள் என அனுரகுமார கேட்கிறார். தொழிலாளர் வர்க்கத்தைப் பற்றி இவ்வளவு கவலை இருந்தால், பொருளாதார நெருக்கடியில் ஏன் அவர் நாட்டை ஏற்கவில்லை. நான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய பிறகு, இப்போது நாட்டின் பொறுப்பை கேட்கின்றனர்.

நான் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் இருந்து விலகத் தயாராவதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறி வருகிறது. நான் ராஜினாமா செய்பவன் அல்ல என்பதை அவர்களுக்கு கூறி வைக்கிறேன். அவர்களைப் போல் ஓடும் காலணி அணிந்தவர் அல்ல நான். ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அனைவரையும் என்னுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன். சஜித் பிரேமதாசாவுக்கும் அழைப்பு விடுக்கிறேன். தப்பி ஓடாமல் இருப்பது தொடர்பான பாடத்தை அவருக்குக் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன்.

இக்கட்டான காலங்களில் இந்த நாட்டு மக்களை வாழ வைப்பதற்காக கடினமான முடிவுகளை எடுத்தேன். வைத்தியர் ஒருவர் விருப்பமின்றி அறுவை சிகிச்சை செய்வது போல அந்த முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.

பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், நாங்கள் மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்குகிறோம். 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதே எனது பிரதான நோக்கமாகும்.

இப்போது சஜித்தும், அநுரவும் பொருட்களின் விலையைக் குறைப்பதாக சொல்கின்றனர். சலுகைகள் வழங்கப்படும் என கூறுகின்றனர். திசைகாட்டியின் விஞ்ஞாபனத்தில் அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வாக்குறுதி வழங்கியுள்ளவற்றைக் கொடுத்தால் அரசாங்கத்தின் செலவு உயரும்.

அனைத்து வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களையும் சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்துள்ளது. செப்டம்பர் 13 ஆம் திகதி IMF அறிவிப்பொன்றை வெளியிட்டது.

“இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியிலிருந்து வெளியேற ஒரு வாய்ப்பை வழங்குவதற்கு இந்த வேலைத் திட்டத்தின் நோக்கங்களை அடைவது மிகவும் முக்கியமானது” என்று அது கூறியுள்ளது. இந்த இலக்குகளை மாற்ற வேண்டாம் என்று IMF கூறியுள்ளது.

தற்போதைய சீர்திருத்தங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பது அவசியமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை மாற்ற முடியாது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, உடன்பாடு எட்டப்பட்ட ஒப்பந்தங்களை தொடர வேண்டும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது. இவற்றை நான் கூறவில்லை. சர்வதேச நாணய நிதியம் தான் கூறுகிறது.

ஜனாதிபதி ஆசனத்தில் அமர தனக்கு வாய்ப்பொன்றை வழங்குமாறு அநுர கேட்கிறார். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி நாற்காலிக்கு கொண்டு வர ஜே.வி.பி. தான் பரிந்துரைத்தது. அவர்கள் முகத்தை மாற்ற முயல்கிறார்கள்.

நான் எதனையும் மாற்ற மாட்டேன். பாராளுமன்ற அதிகாரத்தைக் கொண்டு நாட்டை ஸ்திரப்படுத்தினேன். புரட்சியொன்றை மேற்கொள்வதற்கே மக்களிடம் ஆணையைக் கேட்கிறேன். மாற்றத்தைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அதற்கு ஒரு நடைமுறைச் சாத்தியமான திட்டம் தேவை. 5 வருடங்களுக்குள் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தி புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

மேலும், அஸ்வெசும, உறுமய ஆகிய திட்டங்களை செயல்படுத்தி சமூக புரட்சியை செய்து வருகிறேன். இந்தப் புரட்சியை யாரும் செய்யவில்லை. இந்தப் புரட்சியில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன உள்ளிட்ட நாம் அனைவரும் இணைந்து இந்தப் புரட்சியை செய்வோம். ” என்றும் தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன:

”ஆட்சி வீழ்ச்சியடைந்தது. வரலாற்றில் ஒருபோதுமில்லாத வங்குரோத்து நிலை உருவானது. அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அன்றாட செயற்பாடுகள் தடைப்பட்டன. இதனைப் பயன்படுத்திய சில சக்திகள் முக்கிய இடங்களை தாக்கி நாட்டை அராஜக நிலைக்கு தள்ள முயன்றனர். அந்தக் குழு இன்று வேறு விதமாக செயற்படுகின்றன.பல தடவைகள் அமைச்சு பதவிகள், பிரதமர் பதவிகள் வகித்துள்ள அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவராக நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்டெடுத்தார்.

ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் மத்திய நிலையமாக மலையகம் காணப்படுகிறது. பொய் வாக்குறுதிகளுக்கும் சாத்தியமற்ற விடயங்களையும் முன்வைத்து ஆட்சியைப்பெற முடியும் என அநுர எதிர்பார்க்கிறார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான எம்.பிகளின் ஒத்துழைப்பு கிடைத்தது. 3 எம்.பிகளை கொண்டு ஒரு சட்டத்தையாவது நிறைவேற்ற முடியுமா? அரசியலமைப்பு ரீதியான நெருக்கடியே இவர்களால் ஏற்படும்.

எதிர்காலத்தை பலப்படுத்த அனைவரும் இணைந்து பங்களிப்போம். ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை நிறைவேற்ற நாமும் ஒத்துழைப்போம். தேரவாத பொருளாதாரத்தை முன்னெடுக்க பரிந்துரைத்துள்ள ஜனாதிபதியின் திட்டத்துடன் அனைவரும் கைகோர்ப்போம்.” என்றார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை:

”1994 இல் சுதந்திரக் கட்சி அரசாங்கம் உருவாக எனது தந்தை பெரும்பங்காற்றினார். இடதுசாரி குடும்பமொன்றில் பிறந்த நான் எப்பொழுதும் எதிராகச் செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க பாடுபடுகிறேன். நாமும் தவறு செய்துள்ளோம். கோட்டாபய வேறொருவருக்கு வழங்க முன்வந்தார்.சஜித் முடியாது என்றார். அநுர தொலைபேசியைக் கூட தூக்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவை அழைத்த போது ஒரு மணிநேரத்தில் பிரதமர் பதிவியை ஏற்றார். ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவோம் என மஹிந்த ராஜபக்ஷ எமக்கு கூறினார். அவருக்க வாக்களிக்க சிந்தித்தேன். வாக்களிக்கும் போது கைநடுங்கியது. அன்று அளித்த வாக்கினால் அவர் எமது நாட்டை மீட்டுள்ளது குறித்து பெருமையடைகின்றேன். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கைநடுங்காமல் தைரியமாக அவருக்காக வாக்களிப்பேன்.

சஜித்தோ ரணிலோ கண்டிக்கு ஏதாவது சேவையாற்றியுள்ளனரா? ரணில் விக்ரமசிங்கவின் மாணவர் தான் சஜித். நல்லாட்சியில் அலரி மாளிகையில் தான் அநுர இருந்தார். ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.

அநுர வென்றிபெற்றதாக கருதினாலும் அவர்களிடம் 3 எம்.பிகள் தான் உள்ளனர். காபந்து அரசாங்கத்தில் 20 அமைச்சர்களாவது இருக்க வேண்டும். எனவே சிந்தித்து வாக்களிப்போம்.” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதயன கிரிந்திகொட;

”இவ்வாறான புரட்சி வேறு நாட்டில் நடந்தது கிடையாது. பல நாடுகள் இன்னும் எழுச்சி பெற முடியாதுள்ளது. எனவே, நாம் சிந்தித்து செயப்படுவோம். கேஸ் சிலிண்டரை வெல்ல வைப்போம்.” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்‌ஷ:

”கடந்த காலத்தில் ஜே.வி.பி நாடுபூராவும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அநுரவின் பிள்ளைகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தான் கற்கின்றனர். விபசாரத்தை சட்டமாக்குவது குறித்து பிமல் ரத்னாயக்கவின் மனைவி கூறுகிறார். தலதா பெரஹரவை மாத்தறையில் ஆரம்பிப்பதாக லால் காந்த சொல்கிறார். இதனை நீங்கள் அனுமதிக்கப் போகறீர்களா? சட்டத்தின் ஆட்சியை கிராமத்திற்கு கொண்டு செல்வதாக கூறுகின்றனர். சட்டத்தை கையில் எடுக்கத் தயாராகின்றனர். எனவே இதற்கு இடமளிக்கக் கூடாது. ஜனாதிபதியை வெல்ல வைப்போம்.” என்றார்.

இராஜாங்க அமைச்சர் அநுராத ஜெயரத்ன:
”22 ஆம் திகதி புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வரியை யுகத்தின் போது மக்களைக் காப்பாற்றாத சஜித்தினால் இந்த நாட்டை முன்னேற்ற முடியுமா? 76 வருட சாபம் குறித்து 1970 இல் 8 வீதமானவர்களுக்குத் தான் மின்சார வசதி இருந்தது. டிரான்போமர்களை அழித்தது ஜே.வி.பி தான். தொழில் முயற்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இன்று 99.8 வீதமானவர்களுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம:

”இந்தத் தேர்தல் இரு குழுக்களுக்கிடையில் தான் நடைபெறுகிறது. முடியாது என்ற குழுவுக்கும் முடியும் என்ற குழுவுக்கும் இடையிலான போட்டி தான் நடைபெறுகிறது. 2005இல் யுத்தம் நடைபெற்ற போது கட்சி போதமின்ற அனைவரும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளித்தனர். கோவிட் யுத்தத்தை கோட்டா வென்றார். பொருளாதார யுத்தத்தில் தோற்றார். இந்த நிலையிலே மின்வெட்டு அமுலானது. வரிசை யுகம் வந்தது. அரச செலவில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் பேணப்படுகிறது. மாற்று அரசாக எதிர்க்கட்சி கருதப்படுகிறது. ஆனால் பொறுப்பை ஏற்க சஜித் மறுத்தார். அநுர குமார மற்றும் சரத் பொன்சேக்காவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பொறுப்பை ஏற்று செயற்பட முடியாத தலைவராகத் தான் எப்பொழுதும் நாம் ஜனாதிபதியை விமர்தித்தோம். தனது திறமையால் நாடு மீட்க்கப்பட்டது. 2 வருடத்தில் பெரும் அதிசயத்தை அவர் ஏற்படுத்தினார். தொலைபேசியில் டிக்டொக் பார்த்தால் கொமண்ட் அடிக்கும் கும்பலொன்று செயப்படுகிறது. அந்தக் குழுவின் கருத்தைப் பார்த்து நாட்டுத் தலைவரை தெரிவு செய்ய முடியுமா?” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே:
”வங்குரோத்தடைந்த நாட்டை மீட்டதாலே கட்சிக் கொள்கைகளையும் கட்சியையும் ஓரங்கட்டி உங்களுடன் கைகோர்த்தோம். நிறைவேற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்று 24 மணிநேரத்தில் வன்முறைகளை நிறுத்தி நாட்டை சுமூக நிலைக்கு கொண்டுவந்தார். வெளிநாட்டு தலைவர்களுடன் நாட்டை மீட்க நீங்கள் எடுத்த முயற்சிகளை நான் நேரில் கண்டிருக்கிறேன். உங்களை ஏற்று உலக நாடுகள் உங்களுக்கு உதவின. ரணில் விக்ரமசிங்க என்ற பாத்திரத்தை மதிப்பதாலே அவர்கள் உதவினர். உங்கள் மீதான நம்பிக்கையில் தான் கடனை மீளச் செலுத்த கால அவகாசம் வழங்கின. 69 இலட்சம் பெற்ற பொதுஜன பெரமுனவின் வாக்குகள் உங்களுக்குத்தான் கிடைக்கும். தலதா மாளிகையை அழிக்க குண்டு வீசிய ஜே.வி.பிக்கு கண்டி மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள:

”2022 இல் நாட்டை ஏற்ற போது ஐக்கிய மக்கள் சக்தி நகைத்தனர். ஐ.எம்.எப் பேச்சுவார்த்தைகள் தோற்கும் என்றனர். கடன் கிடைக்காது என்றனர். 6 மாதம் செல்ல முன் மீண்டும் வீழ்ச்சியடையும் என்றனர். ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றனர். தேர்தலை நடத்த மாட்டார் என்றனர். எதிரணி சொன்ன அனைத்துமே இன்று பொய்யாகியுள்ளது. இயலும் என அனைத்தையும் செய்து காட்டியுள்ளார். எஞ்சிய 50 வீத செயற்பாடுகளையும் நிறைவு செய்வதற்காகத் தான் அவர் ஆட்சியைக் கேட்கிறார். ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் அனைவருக்கும் பதவி கொடுக்கின்றனர். அவர்களால் எதுவும் செய்ய முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார்:

”2015 மற்றும் 2019 இல் நாம் தவறவிட்டோம். அதனால் இந்த நாடு வீழ்ச்சியடைந்தது. நாம் அன்று கட்சி, நிறம் என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கினோம். ஊடக பொய்களுக்கு ஏமார்ந்தோம். பேஸ்புக் பதிவுகளைப் பார்த்து ஏமார்ந்தோம். சரியான தலைவரை தெரிவு செய்யமுடியாமல் போனது. நாடு வீழ்ந்தபோது சரியான தலைவரை நாம் அடையாளம் கண்டோம். எமது துன்பத்தைக் கண்டு எம்மைப் பாதுகாக்கவும் நாட்டை மீட்டெடுக்கவும் கூடிய ஒரே தலைவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்பதை எமது நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

எதிர்புறம் பொம்மைகளும் இரத்தத்தை கைகளில் தோய்த்த பசுந்தோல் போர்த்திய ஓநாய்க் கூட்டமும் இருக்கின்றன. அந்த சோளக் காட்டு பொம்மைகளிடம் இருந்தும் ஓநாய்களிடம் இருந்தும் எமது நாட்டையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும். எனவே, நாம் இன்று ஒரு தீர்க்கமான தருணத்தில் இருக்கின்றோம். இந்த தருணத்தில் நாட்டைப் பாதுகாக்கக் கூடிய ஒரே தலைவராக இருக்கும் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச்செய்வோம்.” என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்:

”இந்தத் தேர்தல் இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் நடக்கின்ற தேர்தல். பொருளாதார வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் நடக்கின்ற தேர்தல். அந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஒரு தலைவர் என்றால் அது எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மாத்திரமே. அவர் எடுத்த முயற்சியால்தான் இன்று நாடு படிப்படியாக பொருளாதார ரீதியில் முன்னேறி வருகின்றது. இனிமேல் அனைத்தையும் செய்வேன் என்று மக்களை கவர்வதற்காக மேடையில் யாருக்கும் கதைக்கலாம். ஆனால் நெருக்கடியின் போது யாரும் முன்வரவில்லை.

இப்போது அமுல்படுத்த முடியாத விடயங்களை அவர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். யாருக்கும் எதையும் கதைக்கலாம். ஆனால் செயல்வீரன் ஒருவன் மாத்திரமே இருக்கிறார். அவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அவரால் தான் நாட்டை மீட்டெடுக்க முடியும். பெருந்தோட்டங்களின் EPF, ETF தொடர்பான பிரச்சினைகளுக்கு நிதியை ஒதுக்கி தீர்வு காணவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அது மாத்திரமன்றி கல்வி, காணிப் பிரச்சினை,வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பாக இதுவரை இருந்த சிக்கல்களைத் தீர்க்க கடந்த இரண்டு வருடங்களாக அவர் பல்வேறு பணிகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த தேர்தலில் நீங்கள் ஒரு கட்சி சார்ந்த ஒரு தனி நபருக்கு வாக்களிப்பதாக அமையாது. மாறாக அது இந்த நாட்டின் வெற்றிக்காக அளிக்கப்படும் வாக்குகளே என்பதைக் கூறிக்கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து ரணில் விக்ரமசிங்கவை அமோக வெற்றி பெறச் செய்வது எமது பொறுப்பும் கடமையும் ஆகும்” என்றார்.

இந்தக் கூட்டத்தில் மகாசங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், கட்சி அமைப்பாளர்கள்,முன்னாள் மாகாண மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )