மலாய் சிக்கன் கறி

மலாய் சிக்கன் கறி

சிக்கனை வைத்து செய்யப்படும் அனைத்து உணவுகளுமே சுவையாகத்தான் இருக்கும்.

அந்த வகையில் வித்தியாசமான மலாய் சிக்கன் கறி எவ்வாறு செய்வதெனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – அரை கிலோ
  • மசாலாத் தூள் – ஒரு மேசைக்கரண்டி
  • மல்லித் தூள் – இரண்டு மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் – கால் மேசைக்கரண்டி
  • தயிர் – ஒரு கப்
  • பெரிய வெங்காயம் – 2
  • க்ரீம் – இரண்டு மேசைக்கரண்டி
  • வெள்ளைப்பூண்டு – 6 பல்
  • பச்சை மிளகாய் – 3
  • இஞ்சி – சிறிய துண்டு
  • முந்திரி – 10
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை நறுக்கி, வெள்ளைப்பூண்டை பேஸ்ட் போல் செய்து சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரையில் வதக்கிவிட்டு அதனை ஒரு தட்டில் கொட்டி சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.

முந்திரிகளை நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும்.

சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை எடுத்து பாத்திரத்தில் போட்டு அதில் மல்லித் தூள், மசாலாத் தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் போன்றவற்றை போட்டு நன்கு கலந்துவிடவும்.

பின் அதில் அரைத்து வைத்திருக்கும் முந்திரி பேஸ்ட், இஞ்சி, வெள்ளைப்பூண்டு பேஸ்ட், தயிர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு ஒரு மணித்தியாலம் வரை ஊறவிடவும்.

ஒரு மணித்தியாலம் கழித்து ஒரு பாத்திரத்தில் மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிக்கனை கொட்டி நன்கு கிளறிவிட வேண்டும்.

வதக்கி ஆற வைத்திருக்கும் வெங்காயத்தை எடுத்து கைகளினால் நன்றாக நசுக்கி அதில் கலந்துவிடவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்துவிட்டு மூடி போட்டு 15 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.

மூடியைத் திறந்து அதில் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் விடவும்.

பிறகு அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத் தூவி அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )