மனச்சோர்வை விரட்டும் வீட்டுத்தோட்டம்
வீட்டில் தோட்டம் அமைத்து காய்கறி செடிகள், பூச்செடிகள் வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
அவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு மன நலனை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீட்டில் தோட்டம் வளர்ப்பது மன மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
செடிகளை பராமரிப்பது, அதனுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்கும், மன நிலையை மேம்படுத்தவும் செய்யும். செடிகள் சூழ்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்து முக்கியமான விஷயங்களை பற்றி விவாதிப்பது, சிந்திப்பது படைப்பாற்றல் திறனை 45 சதவீதம் அதிகரிக்க செய்யும் என்பது இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸிடெர் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தனிமை சூழலில் வசிப்பவர்கள் செடிகளை வளர்த்து பராமரிப்பது தனிமை உணர்வை போக்கும், மனச்சோர்வை விரட்டும்.
மன மகிழ்ச்சியையும் அதிகரிக்க வழிவகுக்கும். பசுமை சூழ்ந்த இடத்தில் ஓய்வு எடுப்பது மூளையில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி மன நிம்மதியாக உணர வைக்கும். மகிழ்ச்சியான மன நிலையையும் உண்டாக்கும்.
ஈரப்பதமுள்ள மண்ணில் கைகளை புதைத்து தோட்ட வேலை செய்யும்போது நரம்பு மண்டலத்திலும் அமைதியான உணர்வை ஏற்படுத்தும். மன நலனில் மாற்றங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சியான சூழலையும் உணர வைக்கும்.