இரவில் தலைக்கு குளிக்கலாமா ?

இரவில் தலைக்கு குளிக்கலாமா ?

தற்போது பல பெண்கள், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பிறகு தலைக்கு குளிப்பது புத்துணர்ச்சி அளிப்பதாக நினைக்கிறார்கள். அதனால் பெரும்பாலானோர் தூங்குவதற்கு முன் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இரவில் தலைக்கு குளிக்கும்போது, நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் வரும் என்பது சில பெண்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், இரவில் தலைக்கு குளிக்கும் வழக்கம் சரிதானா? இந்த கேள்விக்கு பதில், ‘இல்லை’ என்பதே.

இரவில் தலைக்கு குளிப்பது, தலைமுடியை சேதப்படுத்துகிறது, முடி உதிர்வுக்கு காரணமாகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இரவில் தலைமுடியை கழுவுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் கூறும் பிற காரணங்கள்.

கூந்தல் பலவீனம்

பெண்கள் இரவில் தலைமுடியை அலசுவதால், அவர்கள் ஈரமான கூந்தலுடன் படுக்கைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இது முடியை எளிதில் உடையக்கூடியதாக மாற்றுகிறது. நீரின் செயல்பாட்டின் காரணமாக, தலைமுடியின் தண்டை பாது காக்கும் வேர்களின் கெரட்டின் செதில்கள் தளர்ந்து, பாதுகாப்பு தடை பலவீனம் அடை கிறது.

தலைமுடியில் நுண்துளைகள் ஏற்படுகின்றன. முடிக்கு ஏற்படும் சேதங்களை அதிகரிக்கின்றன. பொடுகு பிரச்சனை கூடுகிறது. ஈரமான முடியுடன் படுக்கைக்குச் செல்வது, உச்சந்தலையில் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. இது எரிச்சல், சிவத்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் இரவில் வெள்ளை செதில்கள் மற்றும் பொடுகு வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

முடி உதிர்வு

பொதுவாகவே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பின் அதிக முடி உதிர்வை நாம் காண்கிறோம். இந்த நிலையில் இரவில் தலைக்குக் குளிக்கும்போது ஈரமான கூந்தலுடன் படுக்கைக்குச் செல்வதால், முடிகளில் நார்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது. தலையணையில் உராய்தல் பிரச்சனை. காலையில் முடி உதிர்வதை ஊக்குவிக்கும். மேலும் சிக்கு மற்றும் முடி உடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

முடியின் தரம் குறையும்

தூங்குவதற்கு முன் குளித்தால், காலையில் சுத்தமான, பளபளப்பான கூந்தலை நாம் பெறுவோம் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். அதிக ஈரப்பதம் மற்றும் ஈரமான இழைகள் காரணமாக உங்கள் தலைமுடி இரவிலேயே வழுவழுப்பானதாக மாறிவிடும். அடுத்த நாள் காலையில் தலைமுடி பிசுபிசுவென்று இருக்கும்.

பிற பிரச்சனைகள்

இரவில் தலைக்குக் குளிப்பது தற்காலிக புத்துணர்ச்சியை அளிக்கலாம். ஆனால் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம். இது உங்கள் முடி இழைகள் மற்றும் உச்சந்தலையில் சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஈஸ்ட் மற்றும் பூஞ்சைத் தொற்று போன்றவற்றுக்கும் உடனடியாக வழிவகுக்கும். இந்த ஈரப்பதம் பூஞ்சைகள் மற்றும் சிறிய பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளை தவிர்க்க, காலையில் தலைக்கு குளிக்கும் வழக்கத்தை பின்பற்றுவதே நல்லது.

தவிர்க்க முடியாமல் இரவு நேரத்தில் குளிக்க நேர்ந்தால் அல்லது இதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது என்று நீங்கள் கூறினால், தலைமுடியை நன்கு உலர்த்திய பின்பே படுக்கைக்குச் செல்லுங்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )