வவுனியாவில் கழிவு நீரில் கழுவி விற்பனை செய்யப்படும் மரக்கறிகள் !
வவுனியாவில் உள்ள இலுப்பையடி பகுதியில் மொத்த மரக்கறி விற்பனை நிலையங்களுக்கு வரும் சில மரக்கறிகள் கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக கரட் போன்ற மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகள் அதனை தமது கடைகளின் பின் இருக்கும் கழிவுகள் வீசப்படும் வவுனியா குளத்தில் கழுவிய பின் அதனை விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது, அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வர்த்தகர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த போதும், தற்போதும் சில வியாபாரிகள் வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்து வருகின்றனர்.
வவுனியா குளமானது நகரில் அமைந்துள்ளதால் பல வர்த்தக நிலையங்களின் கழிவுகள் மற்றும் குப்பை கூலங்கள் என்பன அதில் வீசப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் குறித்த நீரில் மரக்கறிகளை கழுவி விற்பனை செய்வது தொடர்பில் நகரசபை கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அவர்களது வர்த்தக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மரக்கறி கொள்வனவு செய்யும் நுகர்வோர் கோரியுள்ளனர்.