மஹிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் நடந்தால் முழு நாடும் கொந்தளிக்கும்
மஹிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் நடந்தால் முழு நாடும் கொந்தளிக்கும். பிறகு கோட்டாபய ராஜபக்ச சென்றதைவிடவும் மோசமாகவே தற்போதைய அரசுக்கும் செல்ல நேரிடும். எனவே, மஹிந்த மீது கைவைக்க கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் , “முப்படை பலத்தை கொண்டிருந்த புலிகள் அமைப்பை தோற்கடிக்கவே முடியாது என முழு உலகமும் சொன்னது. ஆனால் மாவிலாறுவில் ஆரம்பமான போரை முள்ளிவாய்க்காலில் முடிவுக்குகொண்டுவந்த தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச.
எனவே, அதிகளவு பாதுகாப்பு உள்ள இடத்தில்தான் மஹிந்த ராஜபக்ச இருக்க வேண்டும். ஏனெனில் புலிகளின் நிழல் இன்னும் தொடரவே செய்கின்றது. அதேபோல தடைவிதிக்கப்பட்டிருந்த புலிகளுக்கு புத்துயிர் கொடுக்கக்கூடிய ஆறு டயஸ்போரா அமைப்புகள்மீதான தடை ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் நீக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் அரசியலை நாம் அனுமதிக்காதபோதிலும் போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் என்ற வகையில் அவரை பாதுகாக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கான வேலைத்திட்டம் நடக்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. சந்திரிக்காவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மஹிந்தவை அகற்ற பார்க்கின்றனர்.
மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அவரை வீட்டைவிட்டு வெளியேற்றி, அவருக்கு எதாவது நடந்தால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியும், அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்.
அத்துடன், மஹிந்தவுக்கு ஏதேனும் நடந்து நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டால், கோட்டாபய ராஜபக்ச சென்றதைவிடவும் மோசமாகதான் செல்ல நேரிடும். வாக்களித்த ஆதரவாளர்களையும் தேடமுடியாமல்போகும்.” என தெரிவித்துள்ளார்.