
சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபிக்க நீதியமைச்சு தீர்மானம் – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு
தேசிய மக்கள் சக்தியின் ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ எனும் கொள்கைப்பிரகடனத்தில் கூறப்பட்டிருந்தவாறு ‘சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம்’ ஒன்றை ஸ்தாபிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு அறிவித்துள்ளது.
இத்தீர்மானத்துக்கு அமைவாக முதற்கட்டமாக விசேட நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு உத்தேசித்திருப்பதாகவும், அக்குழுவில் சட்டமா அதிபர் அல்லது சட்டமா அதிபரால் பெயரிடப்படும் பிரதிநிதிகள் இருவர், நீதியமைச்சின் செயலாளர், நீதிமன்ற சேவை தொடர்பில் போதிய தெளிவுடைய நீதியரசர் ஒருவர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அல்லது அவரால் பெயரிடப்படும் பிரதிநிதி ஒருவர் ஆகியோர் உள்ளடங்குவர் எனவும் நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
இக்குழுவானது சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பகட்ட செயற்திட்டத்தை வகுக்கும்.
அச்செயற்திட்டத்தின் அடிப்படையில் சட்டவரைபொன்று தயாரிக்கப்பட்டதன் பின்னர், அதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் ஆலோசனைகளைக் கேட்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.