
சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை சவாலுக்குட்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது : பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடலாம் – உதய கம்மன்பில
சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை சவாலுக்குட்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்தில் மாத்திரமே சவாலுக்குட்படுத்த முடியும். சட்டமா அதிபரை அச்சுறுத்தி சட்டத்தின் ஆட்சியை மலினப்படுத்த வேண்டாம் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் வழக்கில் சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த மூவரை வழக்கில் இருந்து விடுவிக்க சட்டமா அதிபர் எடுத்த தீர்மானம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி, சட்டமா அதிபரை அழைத்து கடுமையாக பேசியதாகவும், பொறுப்பை நிறைவேற்ற முடியாவிடின் பதவியில் இருந்து பயனில்லை என்று குறிப்பிட்டதாகவும் அரசாங்கத்துக்கு இணக்கமான ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. அத்துடன் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை கேள்வி கேட்கும் சட்ட அறிவு ஜனாதிபதிக்கு உள்ளதா,ஜனாதிபதி எந்த சட்ட அதிகாரத்தில் சட்டமா அதிபரை விசாரித்தார்.
சட்டமா அதிபர் பிரதம நீதியரசருக்கு அடுத்த படியான பதவி நிலையில் உள்ளவர். ஆகவே சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நாட்டு மக்கள் உட்பட எவரும் உயர்நீதிமன்றத்தின் ஊடாகவே சவாலுக்குட்படுத்த முடியும்.
1999 ஆம் ஆண்டு மேல் நீதிமன்றத்தின் அப்போதைய நீதியரசர் மஹாநாம திலகரத்னவை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் கைது செய்தார். இவ்விடயம் குறித்து அப்போதைய பிரதம நீதியரசர் பி.எஸ்.சில்வா அப்போதைய சட்டமா அதிபர் சரத் என்.சில்வாவிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு இந்த கைது குறித்து வினவியுள்ளார்.
இதற்கு பதலளித்த சட்டமா அதிபர் சரத் என் சில்வா ‘இந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வரும் வரை பொறுமையுடன் இருங்கள், தொலைபேசியில் விளக்கமளிப்பது முறையற்றது’என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே இதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அதேபோல் 2003 ஆம் ஆண்டு திருகோணமலை நகர சபைக்கு சொந்தமான வீதியில் சந்தியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. இந்த சிலையை அகற்றுவதற்கு ஒருதரப்பினர் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரினார்கள். சட்டமா அதிபரும் புத்தர் சிலையை அகற்ற ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனைக்கு எதிராக எவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை.
சட்டமா அதிபரின் ஆலோசனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டது. நீதிமன்ற விசாரணையில் சட்டமா அதிபரின் ஆலோசனை தவறு என்று நிரூபிக்கப்பட்டு, ஆலோசனை வலுவற்றதாக்கப்பட்டது. ஆகவே சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்தில் மாத்திரமே சவாலுக்குட்படுத்த முடியும்.
லசந்த விக்கிரமதுங்கவின் வழக்கு விவகாரத்தில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முன்பாக ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சட்டமா அதிபரும் மனிதரே இவ்வாறான அசாதாரன செயற்பாடுகளினால் அவர் அச்சமடைந்தால் சட்டத்தின் ஆட்சி மலினப்படுத்தப்படும் என்றார்.